சம்பவங்களை, வரலாறுகளை கூத்தாக்க வேண்டும். – த.மலர்செல்வன்

(படுவான் பாலகன்) பிரதேசத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை, வரலாறுகளை, கதைகளை கூத்துக்களாக எழுதி அவற்றினை அரங்கேற்ற வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்செல்வன் தெரிவித்தார்.
படையாண்டவெளி மாருதம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், படையாண்டவெளி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் நடைபெற்ற வாழவீமன் கூத்து அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
கலாசார உத்தியோகத்தர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இதிகாச, புராணங்களை கூத்தாக ஆடிவருகின்றோம். இவற்றின் தேவையும் எமக்கிருக்கின்றது. இதன்மூலமாக பல விழுமியக்கருத்துக்களையும் அறிய முடிந்தன. தற்கால சூழலில் தமிழர்களின் வரலாறுகள் தொடர்பில் இளந்தலைமுறைக்கு தெரியாத நிலையிருக்கின்றது. அதற்காக எமது வரலாறுகளை, கதைகளை கூத்தாக்க வேண்டும். எமது வரலாறுகளை கூத்தாக எழுதி ஆடுவதன் மூலம். வரலாறுகளை மக்கள் மனங்களில் இலகுவாக பதிய வைக்க முடியும். இதற்கான செயற்பாடுகளை அண்ணாவிமார்களும், கூத்துப்பிரதிகளை எழுதுபவர்களும் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக ஆலயத்தினது வரலாறுகளோ, கிராமத்தினது வரலாறுகளோ, பிரதேசத்தில் நiபெற்ற முக்கிய சம்பவங்களோ இளந்தலைமுறைக்கு தெரியாது. இவற்றினை இளந்தலைமுறைக்கு கடத்தும் ஊடகமாக கூத்தினை பயன்படுத்த வேண்டும்.
கலைமன்றங்களுக்கு எமது கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் உதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வுதவிகள் வருடாந்தம் வழங்கப்படுகின்றன. இயங்கு நிலையில் உள்ள, எமது திணைக்களத்தில் பதியப்பட்ட கலைகழகங்களுக்கே அவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றன. அதேவேளை வருடாந்தம் போட்டி நிகழ்வுகளும் நடாத்தப்படுகின்றன. போட்டி நிகழ்வுகளில் கூத்துப்போட்டி மேடையிலே ஆடப்பட்டன. அவற்றினை நீக்கி 2012ம் ஆண்டு களரியிலே ஆடுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம். அதன் பயனால் தற்போது கூத்துப்போட்டிகள் களரிகளிலே ஆடப்படுகின்றன. என்றார்.