கூட்டமைப்பு தொலைந்தது” –

ப.தெய்வீகன்

தமிழ் தரப்பில் தங்களை தவிர அரசியல் செய்வதற்கு யாருக்கும் மஞ்சாடியளவுகூட மண்டைக்குள் ஒன்றுமில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டுமொருறை நிரூபித்துவிட்டது. நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளுடன் ‘கூட்டமைப்பு தொலைந்தது” – என்று கூவிக்கொண்டு திரிந்த அனைத்து சக்திகளையும் இழுத்து வந்து அல்லையிலேயே மிதித்துவிட்டு அவைகள் அனைத்திலும் ஆட்சி தலைமையை பிடித்திருக்கிறது கூட்டமைப்பு. தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு எந்த சபைகள் தங்கள்; சபைகள் என்று விரல் மடித்து எண்ணிக்கொண்டிருந்த மக்கள் முன்னணியினரின் அரைஞாண் கயிறையும் உருவிக்கொண்ட கூட்டமைப்பு, “அரசியல் என்றால் என்ன என்று படித்து வாருங்கள் தம்பிமார்” – என்று கூறி அரிவரி புத்தகத்தை கையில் கொடுத்து அனுப்பியிருக்கிறது.

இப்போது தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை எங்கும் வெற்றி – எதிலும் வெற்றி – ஏகபோக வெற்றி!!

நல்ல விஷயம்!

அரசியலில் கட்சி வெற்றி என்பது முக்கியமானதுதான். ஆனால், அதனை மக்களது வெற்றியாக மாற்றுவதில்தான் நீண்ட கால சாதனைகள் தங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு வடக்கு மாகாணசபையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதுதான். ஆனால், அந்த வெற்றியால் தேர்தலில் வாக்களித்த மக்கள் வெற்றி பெற்றார்களா? நல்லாட்சி அரசென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த மைத்திரி கூட்டணி வென்றதுதான். ஆனால், அதனை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு அந்த வெற்றிச்சுவை கிடைத்ததா?

இந்த படிப்பினைகளின் பிரகாரம் தற்போதைய வெற்றிகளை உடனடியாகவே மக்களின் வெற்றிகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் தமிழ் கூட்டமைப்பு இறங்கவேண்டும்.

உதாரணத்துக்கு யாழ். மாநகர சபையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் அது கிட்டத்தட்ட வெளிநாட்டு கவுன்ஸில் ஒன்றுக்கு ஈடு இணையான அவையாக தொழிற்படக்கூடிய சகல சௌபாக்கியங்களுடனும் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்பவதற்கு உலகெங்குமுள்ள பல நாடுகளுடன் தமிழர்களும் காத்துக்கிடக்கிறார்கள். அதைவிட, அந்த வரி – இந்த வரி என்று ஓராயிரம் வரிகளால் வருகின்ற பணம், குற்றச்செயல்களால் மலிந்துபோய் கிடக்கும் வடக்கில் சம்பந்தப்பட்டவர்கள் செலுத்துகின்ற நீதிமன்ற தண்டப்பணம், மத்திய அரசினால் ஒதுக்கப்படுகின்ற விசேட அபிவிருத்தி நிதி, மாகாண சபையினால் ஒதுக்கப்படுகின்ற நிதி மற்றும் வெளிநாடு அமைப்புக்கள் அவ்வப்போது கைகுலுக்கிவிட்டு அள்ளிக்கொடுக்கின்ற பணம் என்று ரொக்கங்களில் மிதக்கும் சொர்க்கபுரிபோல காணப்படுகின்ற சபைதான் யாழ். மாநகரசபை.

ஆனால், இந்த மாநகர சபையால் யாழ்ப்பாணம் இன்றுவரை ஏகபோக வசதிகள் எதையும் பெரிதாக பெற்றுக்கொள்ளவுமில்லை. மாநகர சபையின் ஆளுமைத்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் மக்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடைபெறவுமில்லை. உதாரணத்தக்கு யாழ் மாநகர சபையின் அதிக வாக்காளர்களை கொண்டுள்ள கரையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை, குருநகர் போன்ற பிரதேசங்களை எட்டி நின்று கொஞ்சம் மூக்கை விட்டுப்பார்த்தாலே மாநகர சபை இவ்வளவு காலம் செய்து கிழித்த காரியங்களின் சீத்தவம் தெரியும்.

இந்த பெருவெளிகளை நிரப்புகின்ற பெரும்பொறுப்பு தற்போதைய புதிய மேயர் ஆர்னல்ட்டிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இது குறித்து முன்னரும் “ஆனர்ல்ட்டுக்கு ஒரு கடிதம்” – என்ற தலைப்பில் எழுதியருந்தேன்.

ஆர்னல்ட் ஒன்றை விளங்கிக்கொள்ளவேண்டும். யாழ்ப்பாணம் என்பது மேட்டிமைத்தனத்தின் உச்சாணிக்கொம்பில் நின்று கம்பு சுற்றுகின்ற பெருங்குடி மக்கள் உட்பட பல தரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய பிரதேசம். இப்படிப்பட்ட யாழ்ப்பாணத்தை முன்னைய காலங்களில் பொறுப்புக்கு வந்த பல தலைவர்கள் எப்படி எப்படியெல்லாமோ மாற்றியமைக்க முயற்சித்தார்கள். சமூக மாற்றங்கள் – அரசியல் மாற்றங்கள் என்று பல வழிகளில் அவர்களின் முயற்சிகள் அமைந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றவர் யாழ். நகரின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா என்பதை துணிச்சலாக கூறவேண்டும். இங்கு இதனை கூறுவது பலருக்கு பல வகைகளில் முகம் சுளிக்க வைக்கத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை.

தங்கள் மலத்தை இன்னோரு சமூக பிரிவினரை கொண்டு சுத்திகரித்து பெருமைப்பட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாண மக்களை – அவ்வாறு ஒரு சமூகத்தை அடிமைகளாக உருவகித்துக்கொள்வதன் மூலம் தங்களது சாதி திமிரை பெருமையுடன் தக்கவைத்துக்கொண்டிருந்த யாழ்ப்பாண மக்களை – உச்சந்தலையில் ஓங்கி அடித்ததுபோல அவர்களது வளவுகளிலேயே குழி கக்கூசுகளை உருவாக்கி, இன்னொரு சாதி மக்கள் வைத்து செய்து வந்த அடிமைத்தொழிலை அடியோடு அகற்றியவர் அல்பிரட் துரையப்பா. அது மட்டுமல்ல, இன்றைக்கு நாங்கள் அனைவரும் பார்க்கின்ற யாழ்ப்பாணத்தை உருவாக்கியவரும் அவரே! இதனை யாராலும் மறுக்க முடியுமா? யாழ்ப்பாணம் போன்றதொரு பிரதேசத்தில் இப்படியொரு மாற்றத்தை யாராவது நினைத்து பார்க்க முடியுமா?

ரயில் வந்தால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கும் குழந்தை கரைந்துவிடும் என்ற பெரும் கண்டுபிடிப்புக்களை உலக மகா தத்துவங்களாக வைத்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மக்கள், அல்பிரட் துரையப்பா கொண்டு வந்த குழி கக்கூசு திட்டத்தை பயங்கரமாக எதிர்த்தார்கள். “எங்களது வளவுக்குள்ளேயே எங்களது மலமா” – என்று மூக்கை பொத்திக்கொண்டு துள்ளினார்கள். தமக்கு சேவகம் செய்துகொண்டு பீ வண்டில் தள்ளி காலத்தை ஓட்டிய சாதி மக்களை தங்களது அடிமைகளாக வைத்திருக்க முடியாது என்றால், தங்களது மேட்டிமை திமிர் அடங்கிவிடுமே என்று பொங்கினார்கள்.

ஆனால், சாதித்து காட்டினார் அல்பிரட் துரையப்பா!

இதுபோல – முதுகெலும்போடு எழுந்து நின்று செய்யவேண்டிய எத்தனையோ காரியங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன.

யாழ்ப்பாணம் என்பது கலாச்சார விழுமியங்களின் உறைவிடம் என்று பெருமையாக கூறப்படுவது உண்டு. பண்பாட்டு வாழ்வியல் கூறுகள் சுரந்து கிடக்கின்ற பெரும் மையம். ஆனால், இன்று யாழ்ப்பாணத்தில் அவற்றை மருந்துக்கும் காணக்கிடையாது. நகரில் மருந்துக்கடைதான் இருக்கிறது. அந்த மண்ணின் – மக்களை – அவர்களின் பண்பாட்டை எடுத்துக்கூறக்கூடிய ஏதாவது அடையாளங்களை காண்பிக்கமுடியுமா என்றால் அதுவும் இல்லை.

பதவிக்கு வருகின்ற ஆர்னல்ட் முக்கியமான காரியங்களை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தினை தமிழர்களின் கலாச்சார தலைநகராக – பண்பாட்டின் அடையாளங்களை முன்னிறுத்தும் பிரதேசமாக – உருவாக்கவேண்டும். தமிழர்களின் அடையாளங்களை உலகெங்குமிருந்து வருபவர்கள் கண்டு தெரிந்துகொள்ளும் வகையில் நகரின் கட்டுமானத்தையும் பண்பாட்டையும் மீளுருவாக்கம் செய்யவேண்டும்.

இப்படி எத்தனையோ காரியங்களை துணிச்சலாக எடுத்து செய்வதன் மூலம் ஆர்னல்ட் தன்னை சிறந்த ஆளுமை மிக்க தலைவனாக மக்களின் முன்னால் நிறுத்த முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழியாக மிகப்பெரிய பொறுப்பை கையிலெடுக்கப்போகின்ற ஆர்னல்ட்டின் புதிய பாதை, தமிழர் அரசியல் தொடர்பான மிகப்பெரிய வரலாற்றின் வழியாக பயணப்படப்போகிறது என்பதை தீர்க்கமாக சிந்தித்துக்கொண்டால் –

உள்ளுராட்சி சபை தேர்தல் மூலம் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றி அடுத்த கட்டமாக மக்களின் வெற்றியாக மிளிரும்.