மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இரண்டு ஒசுசல நிலையங்கள் .வங்குரோத்து அரசியலுக்காக கொழுத்தின கற்பூரத்தில் கும்பிடக்கூடாது

முன்னாள் பிரதியமைசர் சோ.கணேசமூர்த்தி

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைக்கையாகவும், தேவையாகவும் இருந்த ஒசுசல நிலையங்கள் மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதி சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதியமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கையில் பல மாவட்டங்களில் ஒசுசல நிறுவப்பட்டுள்ளது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை நிறுவுவதற்கான எந்த விதமான ஏற்பாடும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. வறுமைமிக்க மாவட்டமாகவும், கூடுதலான வயோதிபரைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது.

ஒசுசலயினை நிறுவுவதன் மூலம் குறைந்த விலையில் மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியும். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பிரதியமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி இரண்டு ஒசுசல அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கோரிக்கைக்கமைய கடந்த வருடம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் சரத் லியனகேயிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இரண்டு ஒசுசல நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று பட்டிருப்பிலும் மற்றது மட்டக்களப்பிலும் நிறுவப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ளாத மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றார்கள். இவர்கள் அரசியலுக்கு வந்து மூன்று வருடமாகும் தறுவாயில் மாவட்டத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் செயல்படுபவர்களாக உள்ளார்கள். பாராளுமன்றத்தில் இவர்கள் பேசிய விடயம் எல்லாம் நடந்துவிட்டதா?இதை விட்டுவிட்டு நேர கழிப்புக்கு பாராளுமன்றத்தினை செலவிடாமல் வினைத்திறனாக மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மண்டூருக்கு சென்று மக்களின் முன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு உங்களுக்கு வீடு வழங்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் உறுதி வழங்கியுள்ளார். இவ்வாறு அப்பாவி மக்களை ஏமாற்றாமல் இதற்கான திட்ட, காகித வரைவுகளை மேற்கொள்ள வேண்டும்.யார் முயற்சி செய்தாலும் எம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வங்குரோத்து அரசியலுக்காக கொழுத்தின கற்பூரத்தில் கும்பிடக்கூடாது என தெரிவித்தார்.