மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நல்லிணக்கக் குழுக் கூட்டம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பணிப்புரைக்கமைய மாவட்ட மட்டத்திலான நல்லிணக்க குழுக்களைத் தாபித்தல் தொடர்பான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில்நடைபெற்றது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள், 14 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நல்லிணக்கக்குழு உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், முப்படையின் உறுப்பினர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,

2009ஆம் ஆண்டுகளுக்குப்பின்னர் சமாதானமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அடிக்கடி இன மோதல்கள், மத ரீதியான காழ்ப்புணர்வுகள், அதே ஆபால சில குழுக்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டுதான் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நல்லிணக்கக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்ற யோசனையை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.

அந்தவகையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சானது 2017ஆம் ஆண்டு யூன்மாதம் மாவட்டம் தோறும் நல்லிணக்கக் குழுக்களை ஆரம்பிக்க கோரப்பட்டது. அந்த அடிப்படையில் 2017ஆம் ஆண்டு மாவட்ட நல்லிணக்கக் குழு அமைக்கப்பட்டது. மிகக்குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக அது இருந்தது. குழுவின் செயற்பாடுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இருந்ததாக அறியமுடியவில்லை.

இருந்தாலும் அந்த உறுப்பினர்கள் சிறப்பாகச் சயற்பட்டிருந்தார்கள். 2018ஆம்ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாவட்ட நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்விலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அந்த அடிப்படையில் எங்களது உறுப்பினர்கள் முன்வைத்ததன் அடிப்படையில் இன்றைய தினம் சிறப்பானதொரு குழு அமைக்கவேண்டும் என்ற வகையில் இக் கலந்துரையாடல் நடைபெறுகிறது. நீங்கள் சிறப்பாகச் செயற்பட்டு மாவட்டத்தில் இடம்பெறுகிற பிரச்சினைகளைத்தீரப்பதற்கு சிறப்பானதொரு பொறிமுறையினை ஏற்படுத்தி எடுத்தல் இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.

பிரதேச ரீதியாக நடத்தப்படுகின்ற கலந்துரையாடல்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், மாவட்ட ரீதியான நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாகாண ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டு தேசிய ரீதியில் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருக்கிறது.