இராவணனின் விஸ்வரூபம் – ஆரையூர் அருள்

விச்சிரவசு இலங்காபுரி மன்னன் கைகேசு பெற்ற தவப்புதல்வனான தசக்கிரீவநாம இராவணனைத் திருமூலர் ‘ஈஸ்வரர்’ என்றே அறிவிக்கின்றார். இராவணனுக்கு, இராவணேஸ்வரர், இலங்கேஸ்வரர், ஈழநாதர், திரிகூட பர்வதர், சிவனொளிபாதர், தக்~ணேஸ்வரர், தக்~ணகைலாயர், சாமவேதர், சாமகானர், வீணைக் கொடியர் என்னும் பத்து நாமங்கள் உண்டு.
பதினாறு வருடங்கள் மிகுந்த தவம் செய்து தவவலிமையினால் சங்கரரிடமிருந்து ‘சந்திரஹாசம்’ எனும் வீர வாளும், சாமகானம் பாடி முக்கோடி வாழ்நாள் வரமும், புஸ்பக விமானம் எனும் தேரும் பெற்ற சிவபக்தன். வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் உடையவன். குடிகளை குறைவின்றிக் காத்துத் தன்குலம் காத்த கர்ணர். சிறந்த அரசர், உயர்ந்த ஒரு தபசு. சதுரங்க விளையாட்டை முதன்முதலாக கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவன். தாரணி மௌலி பத்தும் வீரமும் கொண்ட விவேகமுடையவர். ஆன்ற விந்தடக்கிய அறிஞர். வீணைக் கொடியேந்திய வித்தகர், இதிகாச வரலாற்று நாயகர்களில் ஒருவரே இராவணன். இலங்காபுரியாண்ட அரசன்.
புராண வரலாற்று நாயகர்களில் ஒருவனான சூரபத்மன் ஆயிரத்தெட்டு அண்டங்களையும் கட்டியாண்டவனென்பது கந்தபுராணக் கதை கூறும் செய்தி. முருகப்பெருமான், முருக மூர்த்தி அவனுக்கு விசுபரூப தரிசனம் காட்ட அவனதை தூரதரிசனமாகக் கான்கின்றான். மாய வலி படைத்த சூரனை மானாபிமானம் தடுத்தது. அதனால் சூக்கும தரிசனம் கிடைக்கவில்லை. ‘தடுத்தது மானமொன்றே’ என்று கூறுகின்றது கந்தபுராணம்.
‘நவீன வகுப்பு வாதத்தை இராமாயணத்தில் கொண்டு வந்து வலிந்து திணிப்பவர், இராவணனுடைய பிறப்பை தெரிந்து கொள்வது அவசியமாகும். இவன் குலத்தில் யாருக்கும் கீழ்ப்பட்டவன் அல்லன்.
குலத்தைப்பற்றி பெருமைபேசுகின்ற கூட்டத்தில் இராவணன் எப்போதும் முதன்மை வகிக்கக் கூடும். மேலான குலத்தினின்று உருவாகின்ற பிரபாகங்கள் எல்லாம் இயல்பாக அவனுக்கு வந்து அமைந்திருந்தன. என்று இராவண தத்துவம் என்ற நூலில் இராவணனின் பிறப்பைக் கூற வந்த சுவாமி சித்பவானந்தர் கூறுகின்றார்.
‘தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்கு எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு தெரிந்தது அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின் மலத்தானே’

என்று திருமூலர் திருமந்திரம் ஜ350ம் செய்யுள் 179ம் பக்கம்ஸ கூறுகின்றது.
சமய குரவர்கள் இராவணனை தமது பாடல்களில் பல இடங்களில் பாடியுள்ளார்கள். உதாரணமாக திருஞான சம்பந்தர் பாடும் போது, ‘எடுத்தவன் தருக்கை இழித்தவன் விரலால்………….’ ஜ கோணேஸ்வரப் பதிகம் 8இல்ஸ கூறப்படுவது உற்று நோக்கப் பாலது, கி.மு. ஆறாயிரம் ஆண்டளவில் இலங்கையை இராவணன் எனப்படும் இலங்காநேசன் ஆண்டானென தட்~ண கைலாச புராணமும், திருகோணாசல புராணமும் கூறுகின்றது. இதனை இராமாயண காவியம் தனது தாயாகிய கைகேசி வழிபாட்டுக்காக லிங்கத்தை பெறுவதற்கு இங்கு தவம் செய்தான் என்றும் கூறுகின்றது.
சிறந்த சிவபக்தனான இராவணன், சிவபக்தையான தனது தாய் தள்ளாத, நோய்வாய்ப்பட்ட போதிலும் தினமும் நெடுந்தூரம் நடந்து வந்து கோணேசர் ஆலயத்தில் பூசை செய்து போவது கண்டு மனம்அ வருந்திய இராவணன், தாயிருக்குமிடத்திற்கு கோயிலை கொண்டுவர தனது பெரிய வாளினால் மலையை வெட்டினான். இதுவே ‘இராவணன் வெட்டு’ என அழைக்கப்படுகின்றது. கபட நாடக சூத்திரதாரி கண்ணன் கோயிலைக் காக்க, கிழப் பிராமண வடிவம் தாங்கி வந்து இராவணனிடம் ‘உன் தாய் இலங்காபுரியில் இறந்துவிட்டார்’ என்று கூற, கேட்டு அதிர்ச்சியடைந்த இராவணன் மலையைப் பிளக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, பெருந்துயருற்று, பிராமணனிடம் தாயின் ஈமக்கிரியையை செய்து தரும்படி இறைஞ்ச, தசக்கிரீவனை கன்னியா எனுமிடத்திற்கு அழைத்துச்சென்று தான் வைத்திருந்த தண்டினால் ஏழு இடங்களில் ஊன்றி வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கி, இராவணனின் அன்னைக்குக் கிரியைகள் செய்த அடுத்த கணமே இராவணனின் தாய் இறந்துவிடுகிறாள் என்றும், தன் தாயார் இறந்த செய்தி கேட்ட இராவணனே கன்னியா என்னுமிடத்தில் சென்று கிரியைகள் செய்வதற்காக தன் கூரிய வாளினால் ஏழு இடங்களில் குத்தினார் என்றும், அதனால் உருவான ஏழு வெந்நீர் ஊற்றுக்களின் புனித நீர் கொண்டு இறுதிக்கிரியை செய்தார் என்றும் கூறப்படுகின்றது.
எது எப்படியிருந்த போதிலும் திருகோணமலைக்கும் இராவணனுக்கும் நெருங்கிய உறவு இருப்பதனை இன்றும் திருக்கோணேசர் ஆலயத்தில் இருக்கும் இராவணன் வெட்டும், கன்னியாவில் இருக்கும் மாறுபட்ட வெப்பநிலை கொண்ட ஏழு வெந்நீர் ஊற்றுக்களும் சான்று கூறுவதை எவராலும் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது என்பது, தெளிவாகும்.
இராவணன் உண்மையில் சீதையில் மையல் வசமாகி மயக்கிக் கவர்ந்தானா? அவளை அடைய வேண்டுமென்ற ஆசையிருந்ததால் அந்த அடர்ந்த கானகத்தில் சர்வ வல்லமையும் பொருந்திய அவனால் முடியாதிருந்திருக்குமா? அதற்காக அவளை மிண்டாகக் கொண்டு வந்து பல வருடங்கள் காவல் காக்க வேண்டுமா? சிறையெடுக்கப்பட்ட சீதை அவளுயிரை மாய்த்துவிடக் கூடாது என்பதற்காகவே காவல் வைத்தான் எனும் உண்மையை உணர மறுப்பவர்களுக்கு மனைவி மண்டோதரியின் சந்தேகம் தீர்க்க நான் சீதையை விரும்பியிருந்தால், அவள் திருமணத்தில் தனு வளைப்பதற்கு முன்பே கவர்ந்திருப்பேன். சீதை சுயம்வரத்திற்கு வந்த ஐம்பத்தாறு இராசாக்களுள் என்னைத் தவிர்ந்த அனைவரும் சீதையின் பால் மோகம் கொண்டே வந்தனர். சிவனைப் பூசிக்கின்ற சிவபக்தனாகிய நான், சிவ சின்னங்களையும் மேலாக நேசிக்கின்ற குணத்தவனாகையால், சிவதனு பூசிக்கப்பட வேண்டிய பொருளானதால், ஒருமுறை அதைத் தரிசிக்கின்ற பேற்றினைப் பெறவே சென்றேன் எனக்கூறி, மற்றவர் மனச்சந்தேகத்திற்கும் மறுமொழி கூறுகின்றான்.

‘இராவணன் ஓர் இராக்சதன் அல்லன்
சிற்றின்பக்குணம் நிறைந்த சிறியோனல்லன்
நற்குணசீல நாணயக் குணக்குன்றன்
தற்பரன் விரும்பு சாமகான வித்தகன்’

என்பதை அவன் விடை கூறி நிற்கின்றது.
தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, கும்பகர்ணனாகி தனது தந்தையின் நேரிழைய தம்பி சித்தப்பன் பட்டுவிட்ட சோகத்தினால் வாட்டமுடன் வந்த இந்திரசித்தாகிய மேகவர்ணனிடம் தாய் மண்டோதரி ‘மகனே உன் சிறிய தந்தை கும்பகர்ணன் மீண்டாரா? என வினாவ, ‘இல்லையம்மா அவர் மாண்டார்’, என்றான். துக்கம் தொண்டையை அடைக்க. ;என்ன மகனே சொல்லுகின்றாய்? பகைவர்கள் கண்டஞ்சும் புஜபல பராக்கிரமனை, யாராலும் வெல்ல முடியாத கும்பகர்ணனைப் போரில் வென்றவர் யார்? கொன்றவன் யார்? என்று அழுதவளை பார்த்து, ‘சீதையைச் சிறையெடுத்தது பிழையென்று, எந்தையின் உள்ளக் கிடக்கையை எள்ளளவும் அறியாது, சீதையை சிறைவிடு என்று முதலில் கூறி, அப்பாவின் மனபலம் மாறாதது கண்டு, செஞ்சோற்றுக்கடன் தீர்க்க போர்க்களம் சென்ற சிறிய தந்தையை, கொல்வதற்கு காரணம், விபீடணன் தானம்மா’, என்றான். தாயோ ‘அப்படிச் சொல்லாதே மகனே அவரும் உன் சித்தப்பாடா’ என்றாள் தாய். அப்படி நீங்கள் சொல்லாதீர்கள் நா கூசுகிறது, அவர் எனக்கு இனி சித்தப்பன் அல்ல, இற்றப்பன்’ என்றான் மேகவண்ணன்.

“ஐயோ, விபீடனா! உன் மூத்தோன் செயல் பிழையென இருப்பினும், உன்னுயிரைக் காக்க, ஏனையோர் உயிர் குடித்தாயே! உடன் பிறப்பின் உயிர் பறித்தாயே! உன் அண்ணனை பழித்தாய், அதைவிட உன் செயல் எவ்வளவு கொடியதடா!” என்றழுத தாயினைப் பார்த்து “தந்தையின் செயலை இழித்து கூறாதே, அவரை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் எண்ணியே கருமமாற்றுபவர். ஆற்றிய பின் அதனை எண்ணவே மாட்டார். தந்தை, ஆயிரம் வேதப் பொருளை அறிந்தவர். ஆழ்ந்த அறிவுடையவர். குபேரனின் மூத்தோன். பரம சிவனுக்கு பரம மித்திரன். வேதாப்பியாசங்கள், வித்தைகள், விரதங்கள், ஸ்நானம், சுபகர்மானுஸ்டானம் முதலிய கிரியைகள் நிறைந்தவர். தன் குலத்தவர்க்கு ஈஸ்வரனாயும், தர்மதானங்களையும், ஆசாரங்களையும், அவர்களுக்கு நடத்திக் காட்டுகின்றவர். அவரின் அருமை பெருமைகளை இந்த ஆரியாக்கர் அறியார்கள்.
என் தந்தை காமவெறியனாம், சிந்தையில் மையல் கொண்டு சீதையை கவர்ந்தாராம், இதுதான் குற்றமென்று, இங்கிருந்து ஓடிச்சென்று இராமரிடம் தஞ்சமடைந்தான். என் இற்றப்பன் விபீடணன், இங்கு வந்த ரகுராமன் தம்பி என்ன ஒரு தாரம் பெற்றவனா? இல்லை அவன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா? இல்லை அவன் தந்தை தசரதன் ஒரு தாரம் கொண்டவனா? ஆரியனாம் தசரதன் பல தாரம் கட்டுவது தர்மம். திராவிடன் இராவணன் கட்டினால் அதர்மம். விந்தையான விளக்கங்கள், வேடிக்கையான விவாதங்கள். அம்மா! திரிகால ஞானியரான எம் தந்தையின் செயலை நாம் இன்று உணராமல் இருக்கலாம். உங்களுக்கு ஒருநாள் தந்தையின் விசுபரூபத்தைக் காட்டுவார், அன்றைக்கு கண்டு கொள்வாயம்மா, இந்த நிலைக்கு என்னை உயர்த்தி ஆளாக்கிய என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமை, “நாளை நானே போர் நடத்துவேன். இன்றே விடை தருவாய் தாயே” என்று விடைபெற்றான் மேசுவர்ணன்.
மறுநாள் இராவணன் போர்த்தகவல் அறிய தமது மாளிகையில் அங்குமிங்கும் உலாவும் போது போர் வீரன் ஒருவன் வந்து பணிவாகப் பிரபு “ இந்திரசித்தைக் கொன்று விட்டார்கள்” என்றான். இராவணன் ஆத்திரம் துக்கம் கலந்த வேகத்தோடு உரத்த குரலில் “மகனே மேகநாதா நீயுமா என்னை விட்டு போய்விட்டாய்” இந்திரனை வெற்றிவாகை சூடிய வீர சிகாமணியே வீரனே தீரனே சூரனே எனக்குக் கிரியை செய்வாய் என்றிருந்த என்னை உனக்கு கிரியை செய்ய வைத்துவிட்டார்களடா கண்மணியே” என்றழுது போர் வீரனைப் பார்த்து “என் மகன் கையில் வாளும் அவன் தேர்மேலும் இருக்கும்வரை அவனை யாரும் வெல்;ல முடியாது”. என்று அவனைப் பார்த்து, தயங்கியபடி தங்கள் இளையோன் அங்கிருக்கும் வரை வெல்லவும் முடியாது. எவரையும் கொல்லவும் முடியாது, என்ற போர் வீரனை ஏறஇறக்கம் பார்த்த இராவணன் தயங்காமல் அறிந்தவற்றை நடந்தவற்றை ஒழியாமல் ஓதடா என்றார் இராவணன்.
“பிரபு மன்னிக்க வேண்டும் தங்கள் குலத்தின் இரகசியங்கள் எல்லாம் கூறி இந்திரசித்தன் பிரம்மாஸ்திரம் சகலரையும் முர்ச்சிக்க வைக்க தங்கள் தம்பி விபீடணன் அனுமான் மூலம் சஞ்சீவி மலையையும் எடுத்து வரவைத்து அனைவர் மூச்சையும் தெளிவித்தும் விட்டார்”. என்றான். “பின் என்ன செய்தான் அந்த வெட்கம் கெட்டவன்” என்று வினாவினான் இராவணன், பிரபு விபீடணன் வண்டுருக் கொண்டு இங்கு வந்து அனைத்தையும் சுற்றிப் பார்த்து செய்த நிகும்பலை யாகத்தைக் கண்டு உடன் பறந்து சென்று பகைவரிடம் சகலத்தையும் விண்டுத யாகத்தை அழிக்கும் வகைகளையும் சொன்னவன் அவன்தான். அன்றியும் இந்தப்போர் சீதையின் பொருட்டல்ல. உங்களின் தவ வலிமை கீர்த்தி வீரம் கண்டு மனப்பொறாமை கொண்டு விபீடணன் நேராக உங்களை எதிர்க்க வல்லமையின்றி நெடுநாள் நீருபூத்த நெருப்பாக அவன் நெஞ்சு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த பகைமுடிக்க இதை சாதகமாக்கிக் கொண்ட அவர் தம்பியின் சதிக்கு அதாவது இராவணன் விபீடணன் போரில் ஒரு கொடியில் பிறந்த உடன்பிறப்புக்களின் சண்டையில் நாம் ஏன் வீனே இறக்க வேண்டும் என்று நம் வீரர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது என்று அயலான் மனைவியை அண்ணன் கவர்ந்தால், அவளை கொண்டவனுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்? அண்ணன் பிழை செய்தால் ஒதுங்கியிருப்பதை விட்டுவிட்டு, பகைவருடன் சேர்ந்து தன் உடன்பிறப்பை மட்டுமன்றி, குலத்தையும் அழிக்க முன்நின்றதோடு, மூத்தோனுக்குப் பின் முடிசூடவிருந்த தன் மகன் போன்ற இந்திர சித்தரைகொல்லவும் வழி கூறுவானா என்று போர் வீரன் கூற, அடே விபீடனா! உடன் பிறந்தே கொல்லும் வியாதியாகி விட்டாயேடா, முதலில் உன்னை நான் மாய்ப்பேன். பின்னரே மற்றையோரை மாய்ப்பேன் என்று மறுநாள் போருக்கு புறப்பட்டான். இராவணன் மாலை, வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.
இரண்டாம் நாள் இராவணன் போருக்குப் போக ஆயத்தமான போது, நெற்றியில் திலகமிட வந்த மனைவி மண்டோதரியின் கையிலிருந்த மங்கலத் திலகம் தவறி நிலத்தில் சிந்த பதறியவளாக, சிந்திய திலகத்தை விரலில் நனைத்து அவன் நெற்றியில் வைக்கின்றாள். இராவணனின் திலகமாகிய மனைவி மண்டோதரி என்றும் இல்லாதவாறு சஞ்சலத்தால் உந்தும் மனதோடு, தன்மேல் வைத்த கண் வாங்காமல் நிற்கும் இராவணன் நிலை கண்டு பதறியவளை, “மண்டோதரி! இன்று போய் நாளை வா” என்று நேற்றுப் போரில் என்னையந்த ஆரியன் அனுப்பியதை மற்றையவர்கள் அவனின் கருணையுள்ளமென்று கருதிக் கதை கட்டலாம். ஆனால், நான் வணங்கும் சிவன் இவ்வளவு காலமும் என் உள்ளக்கிடக்கையில் போட்டுப் பூட்டி வைத்த எனது விசுபரூபத்தை எனது மனைவியாகிய மண்டோதரியுன்னிடம் மனந்திறந்து காட்டுவதற்கான அர்த்தம் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்” என்றான்.
“பிரபு! அலை கடல் ஓய்ந்தது போன்ற அமைதியான உங்கள் பேச்சு, தங்களுடன் மனம் விட்டு பேச வேண்டும் போல் தோன்றுகின்றது” என்றான். “மண்டோதரி! உன் மனம் மகிழும்படி, இன்று இந்த இராவணன் விசுபரூபக் காட்சி தருவேன். பூரணமாக என்னைப் புரிந்து கொள். இந்த விசுபரூபத்தைக் காண இன்று தவறின் இனி என்று கிடைக்கும் என்பது ஐயமே” என்றான். “அரசே! அப்படியானல், இது நாள்வரை நான் தரிசித்த தாங்கள்” என்றாள் மனைவி. “மனப்போராட்டங்களுக்கு மத்தியில் தன் கடமையைச் செய்ய நிம்மதியற்றுப் பழிசுமந்து செயலாற்றி வந்தேன்” என்று கூறி, “இன்றைய எனது வார்த்தையில் ஒன்றையும் கவனமின்றிச் சிதற விடாதே. உன் கவனம் முழுமையாக என்னிடம் இல்லாவிட்டால், என் விசுபரூப தரிசனத்தை உன்னால் முழுமையாக தரிசிக்க முடியாது. நீயும் உலகத்தோர் போன்றே உண்மை நிலையை உணராதவனாகி விடுவாய்” என்று இராவணன் சொல்லத்தொடங்கினான்.
“இந்த இராவணனுக்கு பெண்ணால்தான் அழிவு என்பது விதி. அப்படியானால் அந்த சீதையைச் சிறைவிட்டிருக்கலாமேயென்று நீயும் யோசிக்கின்றாயல்லவா? என்னழிவுக்கு பெண்தான் காரணம் என்பதை நானறிவேன். ஏனையோர் கருதுவது போல் அது சீதையல்ல. பின் யாரென்றறிய அங்கலாய்க்கின்றாய். அது எனது உடன்பிறப்பு ‘சூர்ப்பணகை என்ன தங்கள் உடன் பிறப்புத் தங்கையே கொல்வதா? என்று மலைக்கின்றாய். அதுதான் விதி. சூர்ப்பணகை மணாளன் விதி வசத்தால் என் கையாள் மாண்டான். அதை நெஞ்சுள் வைத்து வஞ்சம் வளர்த்தாள் சூர்ப்பணகை’ நேரடியாக என்னை எதுவும் செய்ய இயலாதவள். சந்தர்ப்பம் பார்த்திருக்கிறாள். எனக்கு அவகீர்த்தி உண்டாக்கி, அதன்பின் அழிவை உண்டாக்க, சீதையை பயன் கொண்டாள். கானகத்தில் வந்த ஆரிய உடன்பிறப்புக்களைக் கண்டதும், அவள் உள்ளத்தில் உறங்கிய வஞ்சம் விழித்துக் கொண்டது. ஆரியர்களான அவர்களால் என்னை அழிக்க வழிசமைத்தாள். அவர்களின் திட சித்தத்தை சோதிக்க முனைந்தாள். மூக்கறுபட்டாள். தன் சதிக்கு ஆரிய உடன்பிறப்புக்களே உகந்தவர்கள் என உணர்ந்து கொண்டாள்.
திக்கெட்டும் கொடிகட்டிப் புகழ்பரவ அரசோச்சும் இலங்கை வேந்தனின் ஒரே சகோதரி அந்நியரான ஆரியரால் அவமானப்பட்டாலென்று, இலங்காபுரியெங்கும் செய்தி பரவ விட்டாள். தன்னையொரு பரிதாபத்திற்குரிய பொருளாக மாற்றியும் கொண்டாள். என்னிடமும் வந்தாள். மூக்கறுபட்ட நிலையில் என் உடன் பிறப்பை கண்டதும் சகோதர பாசம் மேலோங்க உணர்ச்சிப் பெருக்கால் உளம் நொந்தேன், வெஞ்சினம் கொண்டேன், அவர்கள் மாழ்வதைவிடத் தான் அவமானப்பட்டது போன்று, அவர்களோடு வந்த அந்தப் பெண் சீதையும் அவமானப்பட வேண்டும். அதனால் அந்த ஆரியச் சகோதரர்கள் வருந்தி வருந்தி சிறுகச் சிறுக சாகவேண்டும். எனவே நீ அவளைச் சிறையெடுத்தால் போதும் என்றும், சீதையின் அழகை வர்ணிப்பதன் மூலம் சீதையின் மேல் நான் மோகம் கொள்ள வேண்டும் என்றும் எண்ணிச் செயற்பட்டாள். என் உடன் பிறப்பின் மானத்தையே பெரிதாக எண்ணிய எனக்கு சீதையின் அழகோ அன்றி வேறெதுவுமோ பெரிதாகத் தெரியவில்லை. அன்றியும் அவள் விருப்பப்படி அவள் மனம் குளிரச் சீதையைச் சிறைபிடிப்பதால் அவள் கணவரை நான் தெரிந்தோ தெரியாமலோ கொன்றதால் ஏற்பட்ட பெரும்பழியை அவளுள்ளத்திலிருந்து அகற்றிவிடலாமென்ற பேராவலால் செயற்பட்டேன். அதனால் இன்று பழிப்பட்டேன்.” என்றும் சீதையால்தான் எனக்கழிவென்றால் சீதையை விடுவதால் பலன் உண்டு. ஆனால், சூர்ப்பணகை தான் இராவணன் அழிவுக்குக் கால் என்றால், வீர மரணத்தை தழுவிக்கொள்வதே வீரனுக்கு அழகு.
என் தங்கை பாசத்தால் நான் பாவியானேன். என் தம்பியின் வே~த்தால் நான் ஆவி போனேன். நான் செய்தது தவறு என்ற காரணத்துக்காக, என்னை விட்டுப்பிரிந்த என்தம்பி தஞ்சம் அடைந்தானே அந்த ஆரியன், அவன் போர்க்களத்தில் சிறைவைத்திருக்கும் சீதையை விடு என்றான். அதுமட்டுமென்றால், அதில் தவறில்லை விடுவிக்கலாம். ஆனால் தேவர்களை நாம் முறையில் வைக்க வேண்டுமாம். அதுவும் பாதகமில்லை. ஆரியனை ஆரியன்தான் ஆதரிப்பான். ஆனால் என் தம்பிக்குப் பட்டம் கட்டி, அவனுக்கு அடிபணிந்து, நான் குற்றேவல் செய்ய வேண்டுமாம். விபீடணன் என் செயல்கண்டு வெறுத்தானில்லை. மண்டோதரி தான் அரசாள வேண்டும். என்பதற்காகவே என்னை வெறுத்தான். இதையந்த ஆரியன் கூறிய போதே உணர்ந்தேன். தன்மகள் திரிசடையை இங்கு விட்டுத் தான்மட்டும் தனித்துச் சென்றது, இங்கு உழவறிந்து கூற வேண்டும் என்பதற்காகவே.
சூர்ப்பணகையின் விருப்பத்திற்கு இணங்கியிராவிட்டால், இந்த இலங்காபுரியே இரண்டுபட்டு, பெரும் கலகமே உருவாகி, அதில் வஞ்சத்தால் இராவணன் மடிவதை விட, வெஞ்சமரில் மடிவதையே நான் விரும்பினேன். மண்டோதரி நீ இப்போதாவது விளங்கிக்கொள். என் அழிவுக்கு காரணம் வெளிப்பகையல்ல. உட்பகையே என் உடன்பிறப்புக்களாலே தான் என்பதை. ஒருவனுக்கு அழிவு பிறரால் அல்ல. தன் சுற்றம் சூழல்களால் தான். இதற்கு நானே நல்ல சாட்சி. ஆனால் ஒன்று, இந்த இராவணன் இறக்கலாம். ஆனால், என் இறைவன் சிவனேஸ்வரன் இருக்கும் இடம் எல்லாம், இந்த இராவனேஸ்வரன் இருந்தே தீருவான். அவர் மேனியில் திருநீறு இருக்கும்வரை என் நாமமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த உடல் மறையும். இராவணன் புகழ் என்றும் மறையாது. இப்போது எனது விசுபரூபம் கண்டாயா மண்டோதரி? என்றான் இராவணன். ‘சுவாமி! உங்கள் விசுவரூபம் கண்டு மனம் மகிழ்ந்தது. கலக்கம் கலைந்தது, தெளிவு பிறந்தது. உங்கள் புகழ் என்றும் ஓங்கும், சென்று வாருங்கள்’ என்று விடைகொடுத்தாள்.
போரில் இராவணன் இறந்தான் என்ற செய்தி கேட்ட மண்டோதரி, “தாங்கள் சீதையால் சாகவில்லை. இந்த உடன்பிறந்த பாவிகளால் கொல்லப்பட்டீர்கள். தங்கள் அழிவுக்கு பெண்தான்; காரணம் என்பதையும், ஏனையோர் கருதுவது போன்று சானகி அல்ல என்பதையும், தாங்கள் தங்கள் விசுவரூபம் மூலம் தெளிவாக விளக்கி விட்டீர்கள். தங்கள் இராவண விசுவரூபம் மூலம் உண்மையுணர்ந்து உவமை கொண்டேனையா. பாசத்தால் பழிசுமந்தீர்கள், வே~த்தால் வீழ்ந்து விட்டீர்கள்”. என்றழுது மூர்ச்சையற்று மயங்கி வீழ்ந்தாள் மண்டோதரி.
‘வெள்ளெருக்கும் சடைமுடியோன் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும்
இடம் நாடி இழைத்தவாறே
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச் சிறையில் கறந்த காதல்
உள்ளிருக்கும் என நினைத்து உட்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி’
இராமன் தொடுத்த அம்பு, இராவணனுடைய உடலுள் உயிரைத் தேடியது போல, சானகியை மனச்சிறையில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் என நினைத்து, உடல் புகுந்து தடவிய அம்பு, அக்காதலை அங்கு காணாமல் வெளிNயுறியதாகவும், சிவபக்தன் இராவணன் சிந்தையிலே, சீதையைப் பற்றிய சிந்தையே இல்லையென்று, இப்பாட்டின் மூலம் கம்பரே கூறிவிட்டார்.
இறைபெருமை நிறைந்த இராவணேஸ்வரனை நாம் அனைவரும் உணர்ந்து போற்றுதல் வேண்டும். இராவணேஸ்வரனுக்குக் கதிர்காமத்திலே கிரிவிகாரையின் பிற்பக்கமாக அற்புதமான கோயிலொன்று உண்டு. கல்லாலை விருட்சத்தின் கீழ் அமைந்திருப்பதையிட்டு நாம் அனைவரும் ஆனந்தமடைதல் வேண்டும். இப்படியான சிவபக்தனான இராவணேசனுக்கு ஆரைநகர், செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயத்தின் அருகாமையில் சிலை நிறுவியது மிகவும் பொருத்தமானதாகும்.