தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் உண்மையானதாக இருக்கின்றது…

 

சில கட்சிகளின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வட்டாரம் எதுவென சொல்ல முடியாதவர்களாகவும், மக்களை ஒருவாறாக குழப்புகின்றதுமான வங்குரோத்து அரசியலைச் செய்து வருகின்றனர். ஆனால் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் உண்மையானதாக இருக்கின்றது. அது எமது மக்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார பொதுமக்களுக்கான தேர்தல் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடலும், தேர்தல் பரப்புரை கூட்டமும்  ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளியந்தீவு தெற்கு வட்டார வேட்பாளர் அந்தோனி கிருரஜன் தலைமையில் வட்டார தேர்தல் பணிமனையில் இடம்பெற்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மக்கள் மத்தியில் இனங்காணப்பட்ட தெளிவின்மைகள் தொடர்பிலும், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பிலும் வட்டார மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக இக்கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டாரத்தின் விகிதாசார வேட்பாளர் திருமதி லக்சலாதேவி மற்றும் வட்டார முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எமது மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் தொடர்பில் பல்வேறு தெளிவின்மைகள் காணப்படுகின்றமையை உணர்ந்தோம். இத் தேர்தலானது ஒவ்வொரு பிரதேச மக்களுக்கும் முக்கியமானதொரு விடயம். ஏனெனில் தங்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ளும் செயற்பாடு இங்கு இடம்பெறவிருக்கின்றது. இது தொடர்பில் மக்கள் தெளிவில்லாமல் இருத்தல் கூடாது என்கின்ற நோக்கோடு இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் சில கட்சிகளின் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் வட்டாரம் எதுவென சொல்ல முடியாதவர்களாகவும், மக்களை ஒருவாறாக குழப்புகின்றதுமான வங்குரோத்து அரசியலைச் செய்து வருகின்றனர். அவற்றில் இருந்து மக்கள் தெளிவுபட வேண்டும்.

ஏனெனில் உண்மையான பிரசாரங்களைச் செய்து அவர்களால் மக்கள் முன் செல்ல முடியாது. இவர்கள் பிரசாரத்திற்கு எடுத்துக் கொள்கின்ற விடயங்களாக ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது. இல்லை தில்லுமுல்லு வேலைகள் செய்வது. இவை இரண்டும் இல்லாவிடின் இவர்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் இல்லை.

நாங்கள் இங்கு எவரையும் விமர்சித்து அரசியல் செய்ய வேண்டிதில்லை. ஏனெனில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் உண்மையானதாக இருக்கின்றது. அது எமது மக்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ளது.

உண்மையில் இந்தத் தேர்தலைப் பொருத்த மட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே வெற்றியீட்ட வேண்டும், வெற்றி பெறும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றது. மற்றைய கட்சிகள் எமது மக்களின் வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடனே செயற்படுகின்றது. இதனை மக்கள் உணர வேண்டும். உணர்ந்து தாங்கள் இடும் ஒவ்வொரு வாக்குகளையும் நிதானமாகச் சிந்தித்து வீட்டுச் சின்னத்திற்கு வழங்கி எமது மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

எந்தவொரு வேட்பாளரும் அக்கறை கொள்ளாதவிடத்து அந்தோனி கிருராஜன் மூலம் இவ்வாறான தெளிவூட்டல் விடயம் முன்னெடுக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என மக்கள் இதன் போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.