பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா .மக்கள் நன்றி தெரிவிப்பு!

ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென, நில அளவைத் திணைக்களம் இன்றைய தினம் அளவீடு செய்யவிருந்த நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஊர்காவற்துறை மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் இன்றைய தினம் அளவீடு செய்யப்படவிருந்தது. இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் கடந்த 23ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் உடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நில அளவீட்டு செயற்பாட்டினை அன்றைய தினமே இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்த்கது.
எமது மக்களது காணி, நிலங்களில் பல படையினரிடமிருந்து இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், எமது மக்களுக்குச் சொந்தமான மேலும் காணிகளை படையினரின் பல்வேறு தேவைகளுக்கு என சுவீகரிப்பது நியாயமற்ற செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் இக் காணி அளவீட்டை மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளதுடன், அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்பவே தேசிய பாதுகாப்பு கருதி படையினரும், சட்டம், ஒழுங்கினை நிலைநாட்டும் நோக்கில் பொலிஸாரும் இருக்க வேண்டும் என்றும், அதற்கேற்பவே அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பருத்தியடைப்பு மக்களின் இயல்ப வாழ்வினை சிதைத்துவிடாமல், மேற்படி காணி சுவீகரிப்பினை நிறுத்தியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஊர்காவற்துறை மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.