மைத்திரிபால சிரீசேனாவை ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம்களின் விரோதியாக காட்டிய ஹிஸ்புல்லாஹ்

ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனாவை ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம்களின் விரோதியாக காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரியை காத்தான்குடிக்கு அழைத்து வருவது வேடிக்கையாகும் என காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தாறுஸ்ஸலாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.எம்.மாஹீர் ஹாஜியார் தெரிவித்தார்.

அவரின் அலுவலகம் அண்மையில்  காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதியில் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனாவை முஸ்லிம்களின் விரோதியாக முஸ்லிம்கள் மத்தியில் காட்டினார்.

மஹிந்த ராஜபக்சவை ஆதரித்த இவர் மைத்திரிபால சிரீசேன வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை செய்ய முடியாது எனவும் அன்று பிரச்சாரம் செய்தார்.

இவ்வாறெல்லாம் பிரச்சாரம் செய்து விட்டு எதிர் வரும் 31ம் திகதி ஜனாதிபதி மைத்திரியை காத்தான்குடிக்கு அழைத்து வருகின்றார் என்றால் அது தான் பெரிய வேடிக்கையாகும்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு மைத்திரிபால சிரீசேனாவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கினோம். மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் முஸ்லிம்களுடைய விருப்பங்களுக்கு மாற்றமாக நமது பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் செயற்பட்டார். அரசியலில் இவர்களுக்கெல்லாம் ஒரு கொள்கை கிடையாது. காலத்துக்காலம் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என்றார்.