மற்றவர்களை புறம்பேசியே வாக்கு கேட்கும் அவலம்!

நீண்டகாலமாக உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. பிரச்சாரங்களும் வெகுவாக சூடுபிடித்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கான வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு தந்திரங்களைப்பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்களை உணர்ச்சி வசப்படுத்தியும், ஆசாவாசப்படுத்தியும் வாக்குகளைச் சேகரிக்கலாம் என்றபாணியிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒருபுறமாக வேடிக்கையானதும், வெட்கப்படவேண்டியதுமான பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒருகட்சியை இன்னொரு கட்சி இழிவுபடுத்துவதும், கட்சியின் தலைவர்களை, உறுப்பினர்களை இழிவுபடுத்தி பேசுவதுமே தேர்தல் பரப்புரையாக இடம்பெற்றுவருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான பரப்புரைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்ற வினாவும் எழுந்து நிற்கின்றது.
மக்களிடத்தில், உள்ளுராட்சி தேர்தல் எதற்கு அவசியம்? இதனால் செய்யக்கூடிய வேலைகள் என்ன? நாம் இதற்கு முன்னர் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம்? கட்சியின் நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை, கட்சியின் தனித்துவம், கட்சியின் செல்வாக்கு போன்ற பல விடயங்கள் பற்றியும் கூறி, தமக்கான வாக்குகளை பெற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை குறைத்து கூறி பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்ற தன்மை, பயத்தின் வெளிப்பாடா? என்றதான சந்தேகத்தினையும் ஏற்படுத்தி நிற்கின்றது.
மக்களது வாக்கினை பெறுவதற்கு களமிறங்கியிருக்கும் வேட்பாளர்கள் கைசுத்தமும், வாய்ச்சுத்தமும் கொண்டவர்களாக இருக்கவேண்டுமென்பதும் எல்லோரதும் அவா. ஆனாலும், பிரச்சாரத்திலே மற்றவர்களை பற்றியே பேச ஆரம்பித்துவிட்டார்களானால், வாக்குபெற்ற பின்பு வாக்களித்தவர்களை இழிவுபடுத்தமாட்டார்கள் என்பதிலும் உறுதிப்பாடில்லை. இத்தருணங்களில், ஆழ்ந்த சிந்தனையின் பின், வெளிப்பட்டு நிற்கும் வினாக்களை வேட்பாளர்களிடம் தொடுத்து, பதிலுக்கேற்ற சரியான அங்கத்தவர்களை தெரிவு செய்வதன் மூலமே தாம் நினைக்கும் பலனை பெற்றுக்கொள்ளமுடியும்.