முகநூல் உள்பட சமூக வலைத்தளங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் முகநூலில் பிரச்சாரத்திலீடுபட்ட அரச பணியாளர் விசாரணைகளிற்குள்ளாகியுள்ள நிலையில் முகநூல் உள்பட சமூக வலைத்தளங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிலர் பரப்புரைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. இது சட்டவிரோதமானதாகும். வாக்குகள் மூலம் பெண்கள் தெரிவு செய்யப்படாவிட்டாலும் வெகுமதி முறையின் மூலம் அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்படும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூட்டமைப்பினரின் வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் தமது தலைவர்களை முகநூலில் தாக்குவதாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.