மாற்றுத்திறனாளிகளுக்கான தடைகளை உடைத்தெறிவோம் நடன நிகழ்வு

விஸ் அபிலிற்றி கலை- கல்வி- சமூக மாற்றம் அமைபபின் சக்தி அளிக்கும் நடனம் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
அங்கவீனும் கொண்ட நபர்களை வெளிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டமே கலை- கல்வி- சமூக மாற்றம் ஆகும்.

இது தொடர்பான நடன நிகழ்வுகள் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கருகில் மாலை 4 மணிக்கும் ஏறாவூர் சிவபுரம் கிராமத்தில் 5 மணிமுதல் 6 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஸ் அபிலிற்றி சங்கம் இலாபம் பெறாத ஒரு சங்கமாகச் செயற்பட்டு வருகிறது. ஜேர்மன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அங்கவீனர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அங்கவீனமுற்றவர்களை சமூகத்தில் மற்றவர்களுக்குச் சமமான செயற்பாட்டாளர்களாக மாற்றும் வகையில் விஸ் அபிலிற்றி அமைப்பு செயற்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தடைகளை உடைத்தெறிவோம் என்ற தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளையும், மாற்றுத்திறனாளிகள் அல்லாதவரையும் அங்கத்தவராகக் கொண்ட இந்நிறுவனத்தின் நோக்கமானது, சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் அவமானங்களைத் துடைப்பதும் அவர்களுக்குள்ள தடைகளை உடைத்தெறிவதும் ஆகும். மேலும் மாற்றுத்திறனாளிகளை; சமூகத்தில் சமமான பிரஜையாக ஏற்றுக்கொள்ள வைப்பதுடன் அவர்களுக்கான குரல் கொடுப்பதுமாக அமையும்.

மாற்றுத்திறனாளிகளாக உள்ள நபர்களுக்கு மதிப்பளியுங்கள். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருங்கள் என்ற வகையில் உளரீதியான உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதுடன் நிகழ்வுகளையும் இந் நிறுவனம் நடத்தி வருகிறது.

இது போன்ற பயிற்சி நிகழ்வும் நடன நிகழ்வுகளும் கடந்த 2017ஆம் ஆண்டு யூன், யூலை மாதங்களில் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.