தனித்து போட்டியிடுவதற்கான தீர்தானத்தைக்கூட எடுக்க திராணியற்ற நிலையிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்திற்குப் பின்னால் நாம் செல்லக்கூடாது

தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான தீர்தானத்தைக்கூட எடுக்க திராணியற்ற நிலையிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்திற்குப் பின்னால் நாம் செல்லக்கூடாது என இராஜாங்க அமைச்சர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா கேட்டுள்ளார்.

இந்நிலையில் ஏறாவூர்ப் பிரதேசத்தைக் கட்டியெழுப்ப சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச உள்ளுராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்த்pல் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்- இந்த பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அகமட், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் சொல்லுகிறார்கள் என்பதற்காக மக்கள் தமது வாக்குரிமையை தாரைவார்கக்கூடாது.

ஏறாவூரின் நகரபிதா என்பது இந்த நகரத்தைக் கட்டியெழுப்புகின்ற, செல்வாக்குமிக்க, அரசியல் அனுபவமுள்ள ஜனாதிபதியுடன் நெருக்கமாக உள்ளவரால் மாத்திரமே முடியும்.

அலி ஸாஹிர் மௌலானா, முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அகமட், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் ஆகியோர் வேட்பாளர்களாக நியமித்துள்ளவர்களில்; யாராவது தேக ஆரோக்கியத்தோடு அரசியல் பலம், ஆளுமை, அனுபவம் கொண்டவர்களாக உள்ளனரா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இதேநேரம், முஸ்லிம் காங்கிரஸ் இந்த மண்ணிலுள்ள இரண்டு தலைமைத்துவங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து ஒரு அணியாக நிறுத்துவதற்குக்கூட தகுதியற்ற தலைமைத்துவத்தை போராளிகளாகிய நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் எமது தலைமைத்துவம் எவ்வாறு இருந்தது. யார் போனாலும் யார் இருந்தாலும் அவரே துணிவாக தீர்மானம் எடுப்பார். தென்பகுதியிலுள்ள எந்த அரசியல் தலைவர்களையும் அவர் முன்மாதிரியாகப் பார்த்தது கிடையாது. முஸ்லிம் சமூகம் என்ற ஒரே நோக்குடன் தீர்மானங்களை எடுத்த தலைமைத்துவத்தில் வந்தவர்கள் நாங்கள் என்பதை மறக்க முடியாது.

ஏறாவூரைக் கட்டியெழுப்ப நாங்கள் அதிகமாக நடவடிக்கையெடுத்துள்ளோம். எனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் நகரசபையை சுபைர் அவர்களின் ஒப்படையுங்கள். அபிவிருத்தியின் முழுப்பொறுப்பபையும் நாங்கள் மேற்கொள்வதற்கு ஆயத்தமாக உள்ளோம்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் ஏறாவூர் மண்ணிலே ஐம்பது கிலோமீற்றர் கார்பட் வீதிகளைப் போடுவதற்கு நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளது. இதற்காக ஐயாயிரம் மில்லியன் ரூபாய் கடன்வசதி சவுதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மேலும் உலக வங்கி திட்டத்தோடு புனர்வாழ்வளிப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பிரதேசங்களைத் தெரிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி, வவுணதீவு, ஏறாவூர், ஆரையம்பதி போன்ற பிரதேசங்கள் தெரிவு செய்யபட்டுள்ளன. இதிலே ஏறாவூர் மாத்திரம் 4500 மில்லியன் ரூபாக்களை நகரசபைக்கு வழங்குவதற்கு பாரிய பொருளாதாரத்தை கட்யெழுப்பும் திட்டத்தில் உள்வாங்கியுள்ளோம் என்றார்.