மக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை – கலாநிதி ரவிச்சந்திரா

மக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை. இந்த அரசியல் சிந்தனை தமிழ் மக்களின் அபிலாசைகளையும உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடிச் செல்வதற்கு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று கலாநிதியும் விரிவுரையாளரும் கல்வியியலாளருமான எம்.பி.ரவிச்சந்திரா கூறுகிறார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை குறித்து வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார்.
எமது வாசகர்களுக்காக அவரது நேர்காணலின் முழு வடிவம்.

இன்றைய தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலை என்ன?
குறிப்பாக இன்று மக்கள் தங்களுடைய இருப்புக்களிலும் கொள்கைகளிலுமிருந்து மாறவில்லை என்பதை அவர்கள் கைகளில் எடுத்தள்ள பொராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. ஏந்த மக்கள் தங்களுடைய அரசியல் உரிமைக்காகவும் தங்கள் அடிப்படைத்தேவைகளுக்காகவும் அரசியல் இயக்கங்களை ஆதரிமத்தார்களோ அந்த மக்களே அந்த இயக்கங்களை மறுதலிக்கத் தொடங்கியிருப்பதென்பது முற்றிலுமே மக்களால் ஜீரணிக்கப்படமமுடியாத ஒன்று.
ஆதலால்தான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் தமிழ் அரசியல் கட்சிகளுடைய நடைமுறைச் செயற்பாடு ஒன்றும் கொள்கை ஒன்றுமாக பிளவு பட்ட முரண்பாடொன்றை மக்களிடையே தோற்றுவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே கட்சி மோதல்களாக வெளிக்கிளம்பியுள்ளன. ஏந்த மக்களுக்காக எந்த மக்கள் போராடினார்களோ அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே மக்களைப் புறந்தள்ளுகின்ற போக்கு இன்று கட்சி அரசியலில் மேலோங்கிய காரணத்தினால் அதிகார ஆதிக்கமும் பிரபுத்துவச்சிந்தனையும் தம் தம் கட்சி சார்ந்த நலன்களும் தமிழ்தேசியத்தின் இருப்பை பல்வேறு முனைகளில் கூறு போட வைத்துள்ளது. இத்தகையதொரு சூழலில்த்தான் மாற்றுத் தலைமைகள் தொடர்பான சிந்தனை தமிழ் மக்களின் கொள்கைப் பற்றுறதியுடையவர்களிடத்தில் மேலோங்கியுள்ளது.

இந்த வகையில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் என்ன கூற வருகிறீர்கள். ?
ஊள்ளுராட்சித் தேர்தல் என்பது தமிழ் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் தனிநாடு கேட்பதற்கான தேர்தல்ல. இது எங்களது அடிப்படைய இருப்புக்களைச் சரிபார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது கிராமத்தை நாமே அபிவிருத்தி செய்வோம். எமது சுய பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம். மேலும் பெண்கள் உரிமை தொடர்பாக, பெண்களுடைய தலைமைத்துவத்தினைக் கொண்டுள்ள குடும்பங்களையும், அரசியல் உபாயங்களுடன் அவர்களுடைய அரசியல், சமூக விடுதலை குறித்தான சிந்தனையை விருத்தி செய்வதுடன் அரசியல் தலைமையை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப தலைமைத்துவப் பண்பினை அவர்களுக்கு வழங்குதல். மேலும் நாளைய தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு இளம் அரசியல் தலைமைகளை இளைஞர்களிடத்தில் உருவாக்குதல். இந்தத் தேர்தல் தமிழ் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு தொடர்பாக எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புக்கள் தமிழரின் அபிலாசைகளை எவர் சரியா முன்னெடுப்பார்கள் என்பதை மக்கள் சரியாக இனங்கண்டு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம். தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்களை அவர்களுடைய அரசியல் போராட்ட வரலாற்றிலிருந்து ஏமாற்ற முடியாத அடிப்படை ஜீவாதாரக் கோரிக்கையாக சமஸ்ட்டி தரத்திலான அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்வதற்கான வாக்குறதியை எந்தக் கட்சியும் மீளப்பெறமுடியாது என்பதை நிரூபித்தல். சிறையிலே வாடுகின்ற அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாகவும், காணாமல் போனவர்களுடைய நிலைமை தொடர்பாகவும் தெளிவாக மக்கள்மீண்டும் ஒருமுறை உலகுக்கு அழுத்திச் சொல்லுதல்.
இன்றைய அரசியல் கட்சிகள் தொடர்பாக தமிழ் மக்களின் மனங்களில் எழுந்துள்ள ஐயப்பாடான நிலைமை எது எனக் கூற முனைகிறீர்கள். ?
தங்களுடைய இருப்புகளிலும் கொள்கையிலும் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தேர்தலை சரியான முறையில் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம், அரசியல் இருப்பு, அபிலாசை இவற்றை வெளிக்காட்டுவதற்கு. தொடர்ந்து நாங்கள் சோரம் போவதற்குத் தயாராக இல்லை. தமிழருடைய தனிநாட்டுக் கோரிக்கைகள் அதற்கான நியாயமான போராட்டங்கள், அர்ப்பணிப்புகள், இழப்புகள் இவையெல்லாம் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெறுமனே ஒரு அறிக்கைவாதக் கட்சியாக, தமிழ் மக்களுக்கு தமிழில் அறிக்கை விடுகின்ற கட்சியாக, தமிழ் மக்களுக்கான அடிப்படைய விடயங்களைக் கூட வழங்குவதற்கு இடைஞ்சலாகத் தான் தமிழ்த் தேசிய அரசியல் இருக்கின்றது என்பதனையும் தமிழ் மக்கள் சொல்லியாக வேண்டும்.
வெறுமனே ஆசனப் பங்கீட்டுக்கான கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் மாறியிருப்பது தமிழ் மக்களுக்கு செய்கின் துரோகமாகவே கருதப்படுகின்றது. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இலங்கை அரசும், ஜனாதிபதியும் சமஸ்டித் தீர்வுதர மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் சமஸ்டியை அடிப்படையாகக் கொண்ட தீர்வு வெளியாகின்றது என்று சொல்லியிருப்பது தமிழ் அரசுக் கட்சி எதை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தெரிவிக்கின்றது. இந்தப் பேச்சுகளுக்குப் பின்னால் ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் தமிழ் அரசுக் கட்சியுடன் எந்தவிதப் பேச்சும் இல்லை என்று சொல்லிவிட்டு பின்னர் மீண்டும் கொழும்புப் பேச்சில் சுமூகமான தீர்வு கிடைத்தது என்று சொல்லுவது தங்களுடைய கட்சி இருப்புக்களையும், தங்கள் ஆசனங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையா? அல்லது தமிழ் மக்களின் இருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பேச்சுவார்த்தையா என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவே வேண்டும். இரண்டாவது விடயம் பிரதமர் ரணில் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் பேசுவதால் தமிழ் அரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னால் நிற்கின்றதா? அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் முன்கதவில் நின்று தமிழ்த் தேசிய வாதத்தைப் பேசிக் கொண்டு பின்கதவால் பேரினவாதக் கட்சிகளுக்குத் துணை போகின்றதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.அந்த தெளிவுபடுத்தலினூடாக ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் தாங்கள் இனியும் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என்று தெரிவித்துக் கொண்டு வெளியோறாமல் இருக்கின்றார்கள் என்றால் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை இவர்கள் ஆமோதித்துச் செல்கிறார்களா?
இன்று தமிழ் மக்களுடைய சிந்தனைகள் அரசியல் கட்சிகள் நோக்கி எவ்வாறு வட்டமிடுகின்றன. ?
எந்த மக்கள் தங்கள் குழந்தைகளையும், தங்கள் சொத்துக்களையும், தங்களையும் அர்ப்பணித்து தங்கள் உரிமைக்காகப் போராடினார்களோ? அதற்காக தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் போராடுவார்கள் என்று நம்பினார்களோ அவர்கள் அனைத்தையும் கைவிட்டு தமிழ் மக்களின் போக்குக்கும், சிந்தனைக்கும், அபிலாசைக்கும், இயல்பு வாழ்க்கைக்கும், அவர்களின் எதிர்வு கூறலுக்கும் முறனான வகையில் நடந்து கொண்டிருப்பதாவது தமிழ் மக்களின் உரிமைகள் அபிலாசைகள் மீது ஏறி நின்று உதறித்தள்ளுவதாகவே அமைகின்றது என்ற கருத்தொன்றும் இப்போது தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

தமிழ் தரப்பு பல்வேறு கூறுகளாகப் போட்டியிடுவது தொடர்பாக உங்களுடைய கருத்தென்ன?
தமிழ் மக்கள் சின்னங்களுக்காகப் போராடவில்லை. சின்னங்கள் இருந்தால்தான் வற்றியடையலாம் என்ற சிந்தனை நம் அரசியல்வாதிகள் பலரிடமுள்ளது. உண்மையில் கொள்கைத் தெளிவும் பற்றுதியும்தான் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினை. எந்த நோக்கத்திற்காக எமது போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதனைத்திரும்பிப்பார்க்க வேண்டியது இதில் முக்கியம்.  எமது மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், எமது பிரதேசங்களில் குடியேற்றம், எமது மக்களின் உரிமைகள், தொழில்வாய்ப்புகள் இந்த விடயங்களுக்காகவே போராட்டங்களுக்கான வித்து எமது தந்தை செல்வா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
அகிம்சைப் போராட்டம் பயனளிக்கவில்லை என்பதால் தான் ஆயுதம் தூக்கி எமது இளைஞர்கள் போராடினார்கள். கடந்த 70 ஆண்டுகள் அகிம்சையிலும், ஆயுத ரீதியிலும் போராடியவர்களுக்கு சர்வதேச அணுக்கிரகங்களுடன் கிடைக்கப்பெறுகின்ற தீர்வுகள் முன்மொழியப்படுகின்ற தருவாயிலே வெறுமனே அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும், கதிரைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளை இராஜதந்திர ரீதியாக சர்வதேச அணுகுமுறைகளையும் புறந்தள்ளி தமது சொந்த சுயநல விருப்பு வெறுப்புகளுக்குள் தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பலியிடுவதென்பது தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று.

 

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும், புலிகளுக்குப் பிறகு அந்த நோக்கத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளார்களா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய சித்தாந்தங்களை தந்தை செல்வா காலம் முதல் இன்றுவரை முன்னெடுத்திருக்கின்றதா என்பது இன்று பலரிடமெழுந்துள் ளகேள்வி. அகிம்சைப் போராட்டத்தில் தந்தை செல்வா தனது தமிழரசுக்கட்சியினைக் கைவிட்டு உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டணியை ஸ்தாபித்த போது அடைந்த வெற்றியும் மாற்றங்களும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வெளிச்சவீட்டுச் சின்னத்தை தமிழர்கள் வெல்ல வைத்த வரலாறும் தமிழர்களுக்குச் சின்னமல்ல பிரச்சினை அவர்களது அடிப்படை உரிமையும் அபிலாசையுமே பிரச்சினை என்பதை உலகம் அறிந்து கொண்டது. ஏந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் அகிம்சையில் போராடி தமது உரிமைக்காக அது பயனளிக்காமல் ஆயதத்தை ஏந்தினார்களோ அது தமிழ் மக்கள் இல்லையென்றால் தமிழ் தேசியமும் அதனை முன்னெடுத்து போராட்ட இயக்கங்களும் அரசியலும் இல்லை. போராட்டமும் இல்லை. எனவே இது மக்களின் போராட்டம் மக்களின் கட்சிகளின் போராட்டம். மக்கள் தங்கள் உவுகள், பிள்ளைகளைக் கொண்டு போராடினார்களே தவிர இருக்கின்ற அரசியல்வாதிகளையும், அவர்களின் சுயநலத்தையும் கொண்டு போராடவில்லை. இன்று அரசியல் இருப்புக்களில் இருப்பவர்கள் போராட்டத்தின் பெயரால் தங்கள் சொந்த வாழ்க்கையை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிறையில் வாழும் கைதிகள் தொடர்பாகவோ, இயல்பு வாழ்க்கைக்காகத் துடிக்கும் மக்கள் தொடர்பாகவோ, போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகவோ வெறும் அறிக்கைவாதங்களை மட்டுமே அவர்கள் முன்வைத்துச் செல்லுகின்றார்கள். சர்வதேச ரீதியாகவும், தேர்தல் விஞ்ஞாபன ரீதியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்ததைப் போன்று எந்த முன்னெடுப்புக்களையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவை என்ற கருத்தியல் தொடர்பில் உங்களது அவிப்பிராயம் என்ன?
ஒரு ஜனநாக நாட்டில் மாற்றுத் தலைமைப்பண்புகள் மேலோங்குவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று. இலங்கையைப் பொறுத்தவரையில் குறிப்பாக தமிழ் பிரதேசத்தில் இவ்வளவு காலமும் மாற்றுத் தலைமைகள் இல்லாத சிந்தனைகள் காரணமாகத்தான் ஆயதப் போரின் மௌனத்தின் பின் மீண்டும் நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் கோட்பாடுகளும் சாதிய வாதங்களும் பிரதேச வாதங்களும் மீண்டும் மேற்கிளம்பும் சூழ்நிலை வலுப்பெற்றிருக்கிறது. இத்தகைய நிலையில் இலங்கையில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மாற்றுத் தலைமைகள் இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு இவ்வாறான சூழல் இருக்கவில்லை. துமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அவர்கள் சொல்வதையும் கேட்பதையும் தவிர வேறு எதனையும் சாதிக்க முடியாத சூழலே இருந்தது. மாற்றுத் தலைமைகளின் உருவாக்கம் ஜனநாயக ரீதியான விமர்சனத்தையும் செயற்திறனுடன் செயற்படக் கூடிய சூழலையும் மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
தந்தை செல்வா தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடினார் அந்தப் போராட்டத்தின் தோல்வி நிலையிலேயே தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். ஆனால் போராட்டக் கொள்கைகளை அவர் கைவிடவில்லை. ஆனால் ஒருவிடயம் தந்தை செல்வாவின் போராட்டக் கொள்கைகள் அகிம்சையில் பயனளிக்கவில்லை என்றுதான் ஆயுதப்போராட்டத்தினை இளைஞர்கள் ஆரம்பித்தனர். ஆனால் ஒரு விடயம், போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்டக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. தமிழ் மக்களுடைய அபிலாசைகளாக தங்களுக்கு சமஸ்டி கிடைக்க வேண்டும் என்பதே. இவ்வளவு காலத்திற்கு அவர்களுக்குத் தீர்வுகள் கிடைக்காது, அதனை மறுத்து செயற்பட்டு வருவதானது தமிழ் மக்கள் செய்த தியாகத்துக்கும் அவர்கள் தம்மைக்காப்பாற்றுவதற்கு தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்கள் செய்த துரோகமே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆதனால்தான் மக்கள் போராட்டங்களை தங்கள் கைகளில் எடுத்து வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். எனவே மாற்றுத்தலைமைகள் மக்களுடைய வழியில் தங்கள் கொள்கைகளும் செலலும் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்பதை நிரூபிப்பார்களாக இருந்தால் நிச்சயம் இத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்.
எனவே மாற்றுத் தலைமையுடனான சிந்தனை என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளையும உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடிச் செல்வதற்கு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் தான் இந்தக் கிராமியத் தேர்தல்கள் மூலம் இழந்த பொருளாதாரங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களையும், முன்மொழிவுகளையும், தங்களுடைய செயற்பாடுகளின் மூலம் தங்கள் தீர்மானங்கள் சரியானது என்று முடிவெடுப்பதற்கான ஒரு சர்வதேச அங்கீகாரத்திற்கான வெளிப்பாடுகளையும் இந்த மாற்றுத் தலைமைகளுக்கு வழங்குவதன் மூலமே இதற்கான தீர்வைக் கண்டுகொள்ள முடியும்.