தமிழ் மக்களின் நன்மை கருத்தித்தான் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தம்மிடமிருந்த விடுதலைதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரையும் வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களை அவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்காதிருந்திருந்தால் அதிகளவானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மனித உரிமைகள் தினத்தன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கிழக்கு மாகாணத்தில் தமது அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டதற்கு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுமே காரணம் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் செய்து வெளிவந்த நிலையில், இவ்விடையம் தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் யாரையும் பலவந்தமாக அக்காலப் பகுதியில் போராட்டத்திற்கு இணைக்கவில்லை. அவ்வாறு எவருடைய வீடுகளுக்கும் நான் சென்று எந்தப் பிள்ளைகளையும் பிடிக்கவில்லை. எனக்கும் அதற்கும் எதுவித சம்மந்தமுமில்லை. தற்போதைய தேர்தல் காலத்தில் திட்டமிட்டு சில தீய சக்திகள் இவ்வாறான பிரசாரங்களுக்கு பெற்றோரை உசார்ப்படுத்தி விடுகின்றார்கள். இதனை உண்மையிலேயே நான் முற்றாக மறுக்கின்றேன். கருணா அம்மானாகிய நான் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருத்தித்தான் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். மட்டக்களப்பிலிருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டதற்குக் கருணாவே காரணம் என்பது தவறான தகவலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.” என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச சபைக்கு முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.