அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

சந்தையில் அரிசி விலையை குறைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் ஒரு தொகை அரிசி இறக்குமதி செய்ய இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை குழுகூட்டத்தில் இது தொடர்பாக விரைவாக ஆராயப்பட்டது. அரிசி விலை 72 முதல் 75 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அரிசியை தனியார் துறையினர் விரைவாக இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது. 500,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தனியார்துறையினர் குறைந்தளவிலேயே இறக்குமதி செய்திருந்தமை கண்டறியப்பட்டது.சதோஷாவும் அரிசியை இறக்குமதி செய்து வருகின்றது. அரிசி இறக்குமதியை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சிலர் உள்ளுர் அரிசியாக பொதிசெய்து விற்பனை செய்வதினாலேயே பிரச்சனை ஏற்பட்டது என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.