உப உணவுப்பயிர்களையும் உற்பத்தி செய்வதற்கு சிறுபோகத்தில் குளங்களில் உள்ள நீரை பெற்றுக்கொள்ள முடியும்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணமானது, மொத்த நெல் உற்பத்தியில் 25வீதமான பங்களிப்பை வழங்குவதாகவும், விவசாயிகள் நெல் உற்பத்தி தவிர்ந்த உப உணவுப்பயிர்களையும் உற்பத்தி செய்வதற்கு சிறுபோகத்தில் குளங்களில் உள்ள நீரை பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண விவசாய கால்நடை நீர்ப்பாசன மீன்பிடி கூட்டிறவு அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
2017ம் ஆண்டில் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான அனுகூலங்களையும், 2018ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று(09) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை கமநலகேந்திர நிலையத்தில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண விவசாய கால்நடை நீர்ப்பாசன மீன்பிடி கூட்டிறவு அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், பட்டிருப்பு பிரிவு நீர்ப்பாசன பொறியிலாளர் கே.பார்த்தீபன், கொக்கட்டிச்சோலை கால்நடை வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு செயலாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணமானது, மொத்த நெல் உற்பத்தியில் 25வீதமான பங்களிப்பை வழங்குவதாகவும், விவசாயிகள் நெல் உற்பத்தி தவிர்ந்த உப உணவுப்பயிர்களையும் உற்பத்தி செய்வதற்கு சிறுபோகத்தில் குளங்களில் உள்ள நீரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதற்காக தேசிய கொள்கைகள் உள்ளது. அத்துடன் விவசாயிகளின் நெல்வயல்கள் மட்டுப்படுத்தப்பட்டு சமமாக காணப்பட்டால் எப்பயிரினையும் செய்கை பண்ண முடியும். மேலும் உயர்ரக மாடுகளை கொள்வனவு செய்வதைவிட உள்ளுர்காளைகளை தரம் உயர்த்துவதன் மூலம் எமது சூழலுக்கு இசைவானதாக மாற்றிக்கொண்டு உயர் பால் அறுவடையை பெறமுடியும். நீர்ப்பாசன வாய்க்கால் அமைத்தல், உப்பு நீர் தடுப்பு அணைக்கட்டு அமைத்தல் போன்ற விவசாயிகளினால் முன்மொழியப்பட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு நிதி அமைச்சின் நிதியொதுக்கீட்டை கொண்டு படிப்படியாக செய்து தருவதற்கான நடவடிக்கையை எடுக்கின்றேன். மேலும் விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்ட விவசாய வீதி திருத்துதல், நெல்நாற்று நடுகை இயந்திரம் வழங்குதல், விவசாய கிணறு அமைத்தல், மேட்டுநில விதையிடும் கருவி வழங்கல் போன்ற திட்டங்களையும் எதிர்வரும் ஆண்டுகளில் பெற்றுத்தருகின்றேன். என்றார்.