வீதியோரங்களில் எல்லோரும் முக்கியம்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும், மாவட்ட பாலியல் நோய் தடுப்பு வேலைத்திட்ட பிரிவினரும் இணைந்து நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

இதனோர் செயற்பாடாக ‘எல்லோரும் முக்கியம்’ என்ற தொனிப்பொருளில் எயிட்ஸ் விழிப்புணர்வு வீதி நாடகம் மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட பாலியல்நோய் தடுப்பு வேலைத்திட்ட பொறுப்பு அதிகாரி அனுஸா சிறிசங்கரின் மேற்பார்வையின் கீழ் பட்டிப்பளை பிரதேச கட்டியம் ஆற்றுகை குழுவினர் ஆற்றுகை செய்து வருகின்றனர்.

மாவட்ட மக்கள் மத்தியில் எச்.ஐ.வீ தொற்றும் முறைகளையும், தொற்றாதிருக்கும் வழிமுறைகளையும் மற்றும் எச்.ஐ.வீ தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை முறையும், அவற்றை பெறக்கூடிய வழிமுறையினையும் தெளிவுபடுத்தும் வகையில் இத்தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 4ம் திகதி ஆரம்பித்த இவ்வீதி நாடகம் எதிர்வரும் 12ம் திகதி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆற்றுகை செய்யப்படவுள்ளது.