அமரர் எஸ்.எம்.கோபாலரத்தினம் என்ற பத்திரிகை விருச்சம்

நானும் பத்திரிகைக்காரன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஊடகத்துறைக்குள் நுழையும் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் அந்த பாக்கியம் குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போன்று ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. எஸ்.எம். ஜீ , கோபு என்றெல்லாம் அவரது நண்பர்களாலும், சிசியப்பிள்ளைகளாலும் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.எம். கோபாலரத்தினம் அந்த மோதிரக் கையுடையவர்களில் ஒருவர்.
நினைவுகளையும், ஞாபகங்களையும் மீட்டுப்பார்ப்பதும் பகிர்ந்து கொள்வதும் அலாதி பிரியமானது. ஆனால் சில ஞாபகங்களைப் பகிர எண்ணும் போது கவலையும், துயரமும் சேர்ந்தே வரும். இந்த நிலையில் எஸ்.எம். ஜீ யின் மறைவால் தமிழ் ஊடகத்துறை இருக்கிறது.
கோபு ஐயா அவர்களின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறும் சந்தர்ப்பம் பலருக்குக்கிடைத்திருக்கிறது. அந்தக் கோபு என்ற இதழியல் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் சிறந்த எழுத்தாற்றலுள்ள பத்திரிகைக்காரர்களாக இந்த உலகின் பல மூலைகளிலும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகத்துறை சார்ந்து நிறைந்த அறிவையும், அனுபவங்களையும் தனதாகக் கொண்ட எஸ்.எம். கோபாலரத்தினம் நவம்பர் 15ஆம் திகதி காலை மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்.
தமிழ்த் தேசிய அரசியல், பத்திரிகைத்துறையில் தவிர்க்க முடியாததொருவராக இருக்கின்ற எஸ்.எம். கோபாலரத்தினம் இலங்கைத் தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் எல்லோராலும் கோபு ஐயா, எஸ்.எம்.ஜீ என்றெல்லாம் அழைக்கப்பட்டார். ஆனால் அதனை விடவும் பல புனைபெயர்களையும் அவர் பயன்படுத்தினார்.
மறைந்த மனோராஜசிங்கம் அவர்களின் நிருவாகத்தில் மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டிருந்த தினக்கதிர் தினசரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக கோபு ஐயா இருந்த வேளை அவரது நிழலில் பயணிக்க வாய்ப்புக்கிடைத்தது பெருமைதான். ஊடகவியலாளர்களுக்கு ஆசான் மற்றும் வழிகாட்டி கிடைப்பதென்பது அரிதானதொன்று. அந்த வகையில் கோபு ஐயாவை வழிகாட்டியாகப் பெற்ற ஊடகக்காரர்கள் அனைவரும் பாக்கியம் பெற்றவர்களே.
மட்டக்களப்பின் கல்லாற்றில் என்றும் சில பதிவுகள் இருக்கின்றன இருந்தாலும், யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் 1930.10.03 ல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த எஸ்.எம்.கோபலரத்தினம், சேணியதெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியையும் பின் இராமகிருஷ்ண மிசன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார். சுவாமி நடராஜானந்தா யாழ்ப்பாணம் வந்த சமயங்களில் எல்லாம் தொண்டு செய்யும் பாக்கியமும் பெற்றார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.எம்.ஜி, 1950களில் கொழும்பில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குனராக ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து ஏழு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தார். பின்னர், யாழ்ப்பாணத்தில்தங்கராசா, – சண்முகரெத்தினம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட ஈழநாடு நாளிதழில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது ஈழகேசரியின் ஆசிரியராகப்பணியாற்றிய பழம்பெரும் பத்திரிகையாளர் இராஜ அரியரத்தினம் ஆசிரியராக கடமையாற்றினார். செய்தி ஆசிரியர், பிரதம ஆசிரியர என ஈழநாடு பத்திரிகையில் இருபத்தொரு ஆண்டுகள் பணியாற்றினார்.
வீரகேசரி பத்திரிகையில் தொடங்கிய அவரது பணி ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய பின் ஓய்வுக்கு வந்தது.
ஈழநாடு நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், ஆசிரியராகவும்இபணியாற்றிய அவர் பின்னர் ஈழமுரசு, ஈழநாதம் , தினக்கதிர் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதே போன்று செய்திக்கதிர், காலைக்கதிர் இதழ்களின் ஆசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். இவற்றின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு நாளிதழின் ஆசிரியபீட கௌரவ ஆலோசகராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
பலரையும் அனுசரித்துப் போதல், ஒவ்வொருவரையும் சரியாக இனம் கண்டுகொள்ளல், சமயோசிதப்புத்தி, நேர்மை, அஞ்சாமை, ஒரு கதாசிரியனைப்போல் வர்ணிக்கும் திறன், ஒரு கவிஞனைப்போல, எடுத்த எடுப்பிலேயே செய்திகளுக்கு கவர்ச்சிகரமான தலைப்புகள் போடும் திறன் இப்படி ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய, தகுதிகளெல்லாம் கோபுவிடம் நிறைந்ததாகவே இருக்கின்றன. அதனால்தான் அறுபது ஆண்டுகாலப் பத்திரிகை உலக வாழ்வை அவர் வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார்.
தனது பட்டறிவுகளை சுவாரசியமாக வாசகர்களுக்கு வழங்குவதில் திறமையுள்ளவராக போபு திகழ்ந்தார். அவ்வாறான குறிப்புகள் வாசகர்களுக்கு அவர்களது வாசிப்புப் பசிக்குத் தீனிபோடுவதாக இருக்கும். அதனை நன்கு அறிந்த வகையிலேயே போபு ஐயாவினுடைய எழுத்துக்கள் அமைந்திருந்தன.
அவருடைய பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு என்ற நூலில் எஸ்.எம்.ஜீ யின் பத்திரிகை உலக வாழ்வானது பழைய செய்திகளையும், பல பெரிய புள்ளிகளினது குணாதிசயங்களையும் அறிந்து கொள்வதற்கு உதவுவதாக இருக்கிறது.
இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் அனுபவம்மிக்க பேராசானாக விளங்கிய எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் வன்னியில் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் நாள் தங்கப்பதக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கோபாலரத்தினம் அவர்களின் காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதுடன் பல்வேறு ஆபத்தான காலகட்டங்களில் அதில் பணியாற்றியிருந்தார். 1981ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்ட போது அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார். இந்த அனுபவக் கதைகளே ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை நூலாக வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் ஆலோசகராகவும் 2000ஆம் ஆண்டின் பின்னர் அவர் கடமையாற்றினார். அத்தோடு; கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து அச்சங்கத்தை வழிநடத்தினார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களான கானமயில்நாதன், திருச்செல்வம், குகநாதன், கந்தசாமி, அனந்த பாலகிட்ணர் என பல பத்திரிகையாளர்களை செதுக்கிய பெருமை எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களையே சாரும்.
நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் 2002, 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்புக்களையும் கௌரவிப்புகளையும் பெற்றார். அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர். அந்த வாரிசுகள் இப்போது அவரது பணிகளைத் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.
கோபு பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால் ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எஸ்.எம்.ஜீ.பாலரத்தினம் எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.
அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ. ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை, அந்த ஒரு உயிர்தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு, ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். எஸ்.எம்.ஜி. என்றால் எல்.எம்.ஜீ போன்ற எழுத்து வன்மையும், எழுத்து நடையும், மக்களிடையே அவருக்கென்று தனி ஒரு இடத்தினையே உருவாக்கிக் கொடுத்தது.
ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த போது, எழுதிய எஸ்.எம்.ஜி.யின் சிறைக்குறிப்புகள்இ தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் இதழில் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற தலைப்பில் தொடராக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அதனைத் தொகுத்து ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலாகவும் வெளியிட்டார். ஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு நூலையும் எஸ்.எம்.ஜி எழுதி வெளியிட்டுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேல் பத்திரிகையே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் சொத்து எதுவும் தேடாதவர், வண்ணார் பண்ணையில் வீதி விஸ்தரிப்பு காரணமாக இடித்துத் தள்ளப்பட்ட வீடும் பொருள்களும் கண்ணில் படாமல் போனது கோபுவுக்கு மிகுந்த கவலையானதொரு விடயம்.
இலங்கையின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக மக்களுக்கான விடயங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஊடகப் போராளி எஸ்.எம்.ஜியின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கடந்த பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் உயிர் இன்று பிரிந்து விட்டது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தமிழ் ஊடகப்பரப்பில் மாத்திரமல்ல, ஆங்கில, சிங்கள மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் அவருடைய நண்பர்கள், வாரிசுகளுமாகப் பிரார்த்திப்போம். அதீத நினைவாற்றல் சுள்ளென்று எடுத்த விடயத்தைச் சொல்லும் எஸ்.எம்.ஜீ;.யின் நினைவுகளுக்காக இது சமர்ப்பணம்.

-அதிரன்

Thanks Virakesari 17.11.2017