செஞ்சிலுவை சங்கத்தினால் கழிவுகள் சேகரிப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தினால், மாவட்டத்தில் டெங்கு அபாயம் இனங்காணப்பட்ட செங்கலடி, மட்டக்களப்பு, ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தவிர்ப்பு விழிப்புணர்வு, சூழல் சுத்திகரிப்பு செயற்பாடுகள், கழிவுகளை சேகரித்து அகற்றுதல் மேலும் அவற்றிற்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக கடந்த புதன்கிழமை(08)  ஒருமுழச்சோலை கிராமத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு செயற்பாட்டின் போது சுமார் மூன்று மணிநேரத்தில் மாணவர்களால் பல பிளாஸ்ரிக் கொள்கலன்கள் மற்றும் சிறட்டைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஒருமுழச்சோலை என்கிற ஒரு சிறிய கிராமத்தில் இவ்வளவு கழிவுகள் சேகரிக்கப்படுமானால் மாவட்டத்தின் நிலை எவ்வாறிருக்கும் என பொதுமக்கள் இதன்போது ஆச்சரியம் தெரிவித்தனர்.

இவ்வேலைத்திட்டமானது இந்த வருடத்தின் இறுதிநாள் வரை மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் நிதியுதவியில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளும், டெங்கு தவிப்பு நிகழ்ச்சித் திட்டமானது ஆறு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருபத்தைந்து செஞ்சிலுவைத் தொண்டர்கள் பயிற்றுவிக்கப்பட்டு,  விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.