9க்கு முதல் எரிபொருள் வழமைக்கு

“நாட்டில் நிலவியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையானது எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் வழமைக்குத் திரும்பும்” என பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“எதிர்வரும் 2 தினங்களுக்குள் 2,500 மெற்றிக்தொன் எரிபொருள், சகல எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும், இதன் பின்னர் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனை விநியோகிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார்.

“எரிபொருள் விநியோகத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்” என சகல எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்திருப்பதாகவும் அமைச்சர், இதன்போது குறிப்பிட்டார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக,அசௌகரியங்களை எதிர்நோக்கிய மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“குறைந்த தரத்திலான எரிபொருள் ஏற்றிவந்த கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு எனக்கு பலவாறுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எனினும், நான் அதனைச் செய்யவில்லை” என்றும் அவர் குறிப்பட்டார்.

“இதுவரை காலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் கப்பலொன்று தாமதமாகி வருகைதந்ததில்லை.

“அத்துடன், கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கொண்டுவரப்பட்ட பெற்றோல் கப்பலானது, இரு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் தரச்சான்றிதலைப் பெற முடியாது போனது” எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.