பயிற்சி பெற்றால்தான் ஆசிரியர் நியமனம்

சிறப்பான பிரஜை நாட்டுக்கு பங்களிப்பு செய்வதற்காக தேவையான கல்விக்கான அடிப்படை எதிர்வரும் மூன்று தசாப்த காலத்தில் பாடசாலைகளில் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய கல்வியற்கல்லூரிகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. தற்போது நாட்டில் மொத்த ஆசிரியர் தொகையில் 60 சதவீதமானோர் டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதி இன்றி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் பயிற்சிகள் பெறாதா அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையை இந்துமாசமுத்திர பிராந்தியத்தின் கல்விக்கேந்திர நிலையமாக தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கல்வித்துறை மேம்பாட்டுக்கான தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இதனை சிறப்பான சேவையாக தரமுயர்த்தப்படும்.
கல்வித்துறையில் உயர்வளர்ச்சியை பெற்றுள்ள நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுக்கள் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 19 கல்விக்கற்கை நெறிகளில் பூர்த்திசெய்த 3336 பேருக்கு இதன்போது பிரதமர் நியமனக்கடிதங்களை வழங்கினார். இதில் 1078பேர் தமிழ்மொழி ஆசிரியர்கள் ஆவர்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் , இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.