உத்தேச செலவுகள் அடங்கிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்

2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மதிப்பீட்டு செலவீனங்கள் அடங்கிய, ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன இந்த சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

2018 ஆம் அண்டுக்கான அரசாங்கத்தின் மதிப்பீட்டு செலவு 3982 பில்லியன் ரூபாவாகும்.

அது கடந்த வருடத்தின் அரச செலவுகளுடன் ஒப்பிடும் போது 46 வீத அதிகரிப்பாகும்.

அதாவது கடந்த வருடத்தைவிட அரசாங்கத்தின் மதிப்பீட்டு செலவு 1259 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

அடுத்த வருடம் அனைத்து மானியங்களுடன் அரசாங்கத்தின் வருமானம் 2175 பில்லியன் ரூபாவாக அமையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை சீர்செய்வதற்கா 1807 பில்லியன் ரூபா உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற வேண்டியுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 290.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடக அமைச்சிற்கு 227.57 பில்லியன் ரூபாவும், உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கு 182.75 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சிற்கு 102.88 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிற்கு 178.39 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு 9.98 பில்லியன் ரூபாவும், பிரதமருக்கு 1.77 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றமை வழமையாகும்.