பெயர் வேண்டாம் நமக்கு நாங்கள் சமஷ்டியைப் பொதியச் செய்திருக்கின்றோம் Viedio

இந்த நாட்டிலே பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது முயல்கொம்பான விடயமாகும். ஆனால் அதனை மிகவும் பக்குவமாகவும், அவதானமாகவும் எமது தலைமை செய்து கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டின் இறுதி வடிவம் நிச்சயம் வரும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தழிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வந்தாறுமூலை மாருதி பாடசாலையின் வருடாந்த வருட இறுதி கலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள் எமது கனவை நனவாக்குகின்ற  செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றது. அந்த நிகழ்ச்சி நிரல் சரியாக வருகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை. அறுபது எழுபது ஆண்டு காலமாக தமிழ் மக்கள் தங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான நடிவடிக்கையினை மேற்கொண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ளி என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பதுதான். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்குவது என்கின்ற விடயத்தில் இதனை உருவாக்குவதற்காகன சூழ்நிலையை உருவாக்கியவர் எமது தலைவர் என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்.

இந்த நாட்டிலே மிகவும் கற்பனையோடு 18வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தொடர்ச்சியாக இந்த நாட்டின் ராஜாவாக இருப்பதற்கு மஹிந்த திட்டம் தீட்டிய போது இதனால் ஜனநாயகம் முற்றுமுழுதாக நாசமாகப் போகின்றது என்ற நிலைமையில் ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டின் பல தலைவர்களுக்கு வந்த போது அது யார் என்ற நிலையில் பலரைச் சொல்லி பலரை மறுத்து யார் வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் யார் வந்தால் ஆதரவு வழங்காது என்கின்ற விடயத்தை எமது தலைவர் தெரிவித்தார். அதன் படி தான் மஹிந்தவின் அணியில் இருந்தே ஒருவர் வந்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன் என்று சொன்ன மைத்திரிபால சிறிசேன அவர்கள் வந்ததும். அவரை ஏற்றார் எமது தலைவர். அவ்வாறு இல்லாவிட்டால் இன்று இருக்கின்ற இந்த புதிய சூழ்நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது.

இந்த புதிய சூழ்நிலையை நாங்கள் வரவேற்பதற்கு அவரை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கினோம் என்பதற்காக மட்டும் அல்ல. புதிய அரசியல் அமைப்பை ஆக்குவதற்கு பாராளுமன்றத்தை நாங்கள் ஒன்றாகத் திரட்டியிருக்கின்றோம். இதற்கு முன்பு ஆக்கப்பட்ட எல்லா அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டினுடைய முழுமையான பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் சிறுபான்மை மக்களின் அதிலும் தமிழ் மக்களின் பங்களிப்போடு இந்த அரசியல் அமைப்புச் சட்டம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் அது ஒரே மனதாக தீர்மானிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற விடயத்தில் எமது தலைவர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒத்தகருத்துள்ளவர்களாக இருந்து மிக இராஜதந்திரமாகக் கையாண்டு தீர்மானத்தை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பாராளுமன்றத்திலே நிறைவேற்றினார்கள். இது நமது நாட்டின் சரித்திரத்திலே பொறித்து வைக்கப்பட வேண்டிய விடயமாகும் அந்த அடிப்படையில் தற்போது அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

தமிழர் என்ற ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒரு விடயத்தை கவனமாகப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த அரசியல் அமைப்பிலே எமது தலைவர்கள் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையில் ஒவ்வொரு தலைவர்களையும் இசையச் செய்யக் கூடிய விதத்தில் இசையச் செய்து தற்போது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கையைச் செய்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலே பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது முயல்கொம்பான விடயமாகும். ஆனால் அதனை மிகவும் பக்குவமாக அவதானமாக எமது தலைமை செய்து கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டின் இறுதி வடிவம் நிச்சயம் வரும் அது வருகின்ற போது எமது தலைவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லுகின்ற போது எமது மக்கள் அதற்கு ஒருசேர வாக்களிக்க வேண்டும்.
எமது அன்பான மாற்றுக் கருத்துக் கொண்ட எல்லா அன்பர்களுக்கும், தலைவர்களுக்கும் சொல்லிக் கொள்ளவது இந்த அரசியல் அமைப்பை எமது தலைவர்கள் ஏற்றுக் கொள்வதற்கிணங்க அனைவரும் ஒத்து நின்று அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் அதற்கு பின்பு பிரிந்து நின்று எமது அரசியலைச் செய்யலாம்.

இப்போது சில சொற்களைப் பற்றியெல்லாம் வெவ்வேறாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களத் தலைவர்கள் சிலர் சமஷ்டி கொடுக்கப்படவில்லை ஒற்றையாட்சி தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். அவர்கள் மக்களுக்கு அவர்கள் அப்படித் தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒற்றையாட்சி என்பது பிரிந்து செல்லாத ஒன்று என்றும், சமஷ்டி என்பது பிரிந்து செல்லும் ஒன்று என்று தான் சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சமஷ்டி என்பது பிரிந்து செல்வது அல்ல.

இங்கு சிங்களத் தலைவர்களால் சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்கின்ற சொல்லானது பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கின்ற செய்தி மாத்திரம் தான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில் இந்த அரசியலமைப்பு பிரிந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அங்கு சமஷ்டி இருக்கும். அதிகாரங்கள் நாங்கள் கேட்டுக் கொண்ட அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

மாகாண ஆளுநர் அரசியல் நடவடிக்கையிலே ஈடுபடக் கூடாது என்கின்ற விடயம் வருகின்றது. இவ்வாறு சமஷ்டிக்கான விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பெயர் வேண்டாம் நமக்கு ஆனால் அதற்குள்ளே நாங்கள் சமஷ்டியைப் பொதியச் செய்திருக்கின்றோம். இதனை நாங்கள் மக்களுக்குச் சொல்லுவோம்.

அதே நேரத்திலே சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று சிங்களத் தலைவர்கள் சொல்லுவார்கள். இவைகள் ஒரு வகை உத்திகள். ஒரு பொருள் ஒருவரிடம் இருக்கின்றது. அந்தப் பொருளை மற்றவருக்குக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட பிறகு கொடுப்பதற்கு விருப்பமில்லாதவர்களுக்கு சில வார்ததைகளைப் பயன்படுத்த வேண்டும். அது தான் இப்போது இந்த அரசியல் அமைப்பிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சமஷ்டி கொடுக்கப்படவில்லை என்று தான் சிங்களத் தலைவர்கள் சொல்லுவார்கள் சொல்லித் தான் ஆக வேண்டும். சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை அதனை நாங்கள் பூதாகாரமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எமது வரலாறுகள் பல பாடங்களை எமக்குச் சொல்லியிருக்கின்றது. எனவே இந்த அரசியல் அமைப்புச் சட்டத்திலே சமஷ்டி இருக்கின்றது, நாங்கள் கேட்ட விடயங்கள் இருக்கின்றது. இப்போது இருக்கின்ற நிலையிலே அதியுச்சமான விடயங்களை எமது தலைவர்கள் இதில் உள்ளடக்கியிருக்கின்றார்கள். இறுதி வடிவம் வருகின்ற போது அதனை நாங்கள் பெற்றெடுப்போம் என்று தெரிவித்தார்.