ஜனவரியில் உள்ளூராட்சி; மார்ச்சில் மாகாண சபை

“உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரவு

நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (21) மாலை நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்தை, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியமையானது, இந்த நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் அமையப்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக, பல்வேறு அனுகூலங்கள் மக்களுக்குக் கிடைக்கப் பெறவுள்ளன. இந்த முறையின் ஊடாக 25 சதவீதமான பெண்கள் உள்வாங்கப்படுவார்கள். நாட்டில் 52 சதவீதமாக உள்ள பெண்களுக்கு, அரசியலில் முறையான வகிபாகத்தை அளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

“அத்துடன், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 90 உறுப்பினர்கள், அரசியல் பின்னணியின் ஊடாகவே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். புதிய தேர்தல் முறையினூடாக, மக்கள் சேவையாற்ற ஆவல்கொண்டுள்ள புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

“நாம் இந்தத் திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பிக்கும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குறித்து நான் கவலையடைகிறேன். மக்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்று, புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது. நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் அனைவரும் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

“குறித்த திருத்தச் சட்டத்தில் அரசியல் கட்சிகள், மக்கள் ஏதாவது திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என எண்ணினால், அது குறித்து கலந்துரையாடவும் நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான உறுதி மொழியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ளார்.

“20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எமக்கு பெறக்கூடியதாக இருக்கின்ற போதிலும், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அதனால், மாகாண சபைத் திருத்தச்சட்ட மூலத்தைக் கொண்டு வந்தோம். எதிர்காலத்தில் அனைத்து வகையான தேர்தல்களும், புதிய தேர்தல் முறையிலேயே நடத்தப்படும் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.