வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய சித்திரத்தேர் அமைக்கும் பணி ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு – திகோணமலை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு தேர் அமைக்கப்படுவதற்கான திருப்பணி ஆலய போசகரும் ஆலய தலைவருமான வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை ஆலயத்தில் இடம்பெற்றது.
சித்திரத் தேருக்கான வேலைகள், ஆலய உற்சவகுரு கிரியாதிலகம் பிரம்மஸ்ரீ ஆ.ரமேஸ்வரக் குருக்கள் ஆலய குரு சிவஸ்ரீ வ. மதிகரக்குருக்கள் ஆகியோரின் கிரியைகளுடனும் ஆசீர்வாதத்துடனும் சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராம மக்களும் ஆலய நிருவாக சபையினரும் கலந்து சிறப்பித்தனர். தேர் சிற்பிகளாக வ. சிறிதரன் தலைமையிலான சன்னதியான் சிற்பாலயம் உடுவில் குழுவினர் ஈடுபடவுள்ளனர். ஆலய உற்சவகாலத்தில் திருப்பணிச்சபையில் நிதியுதவிகளை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த ஆகஸ்ட்மாதம் 24ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 19 நாட்களாக உற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
இம்முறை வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய திருவிழா பிரதேச செயலாளரைத் தலைவராகக் கொண்ட விசேட நிருவாக சபையின் கீழ் நடைபெறுகிறது.
திருவிழாக் காலங்களில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகளை பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூதூர் இலங்கைப் போக்குவரத்துச் சபையினரும், வாகரை டிப்போவினரும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வழமையைவிட இம்முறை அதிகளவான பக்தர்கள் இந்த ஆலயத் திருவிழாவிற்கு வருகை தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், இடவசதி உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
திருவிழாக் காலங்களில் தினமும் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து யாத்திரிகர்கள் வருகை தருவது வழங்கம். அந்த வகையில் பெருமளவான பக்தர்கள் இம்முறை வருகை தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.