அரைகுறை தீர்வைக் கோர எவருக்கும் உரித்தில்லை; தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் நீண்டகால இனநெருக்கடிக்கு வெறுமனே அரை
குறைத் தீர்வை பெற்றுக்கொள்வது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமது கோரிக்கைகளை அடைவதற்காக இதுவரை விலைமதிப்பற்ற தியாகங்களை செய்து பல்வேறு இழப்புகளையும் எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவர்களின் நெடுநாள் அபிலாஷைகளையும் தேவைகளையும் இடைநடுவே கைவிடுவதற்கு எந்தவொரு தனிப்பட்ட தலைவருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ அல்லது அமைப்பொன்றிற்கோ உரித்தில்லையென கூறியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டமொன்று பௌர்ணமி தினமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்டது. அப்பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில்;
சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கோரிக்கையென்பது பிரிட்டிஷாரிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தந்தை செல்வநாயகத்தினால் முன்வைக்கப்பட்டது. 65 வருட காலமாக இக்கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் எம்மை நாம் ஆளும் சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளுடைய கடமை.
இதனை விடுத்து வெறுமனே அரைகுறைத் தீர்வை எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தக் காலத்திலும் பெற்றுக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. பிரச்சினைக்கு தீர்வு காண்போம் எனக் கூறிக்கொண்டும் ஒருபேரில் என்ன இருக்கின்றது என்று கூறிக்கொண்டும் குறைந்தளவு அதிகாரப் பரவலாக்கம் ஒன்றுடன் இணங்கிச் செல்வதை விட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அவர்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளையும் முன்வைத்து உரிய தீர்வு வரும்வரை சளைக்காது முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
போர்க்குற்ற விசாரணை
சர்வதேச உள்ளீட்டுடன் போர்க்குற்ற விசாரணையொன்று நடைபெற வேண்டும். இராணுவ வீரர்களை விட்டுக்கொடுக்கப் போவதில்லையெனவும் அவர்களுக்கு எதிராக விசாரணை செய்ய மாட்டோம் எனவும் அமைச்சர்கள் மட்டத்திலும் ஜனாதிபதி மட்டத்திலும் உறுதிபடக் கூறும் போது தமது  இராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் கட்டாயமாக ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறைமுகமாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

தற்போது இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்பது பற்றி சாட்சியமளிக்கப்போவதாக கூறியுள்ளார். ஆகவே சர்வதேச நீதிபதிகளுடன் குற்ற விசாரணை விரைவில் நடைபெற வேண்டும்.
எமக்கு ஆதரவாக அண்மையில் வழங்கப்பட்ட சமஷ்டி பற்றிய உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கின்றது. இந்நிலையில் சமஷ்டி பற்றி பேசுவதால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எம்மவர்கள் இனிக் கூறத்தேவையில்லை. அந்தத் தீர்ப்பை முன்வைத்து எமது காரியங்களை முன்னடத்திச் செல்ல வேண்டும்.

அதேவேளை போர்க்குற்றங்கள் நடைபெற்றமைக்கு போதிய ஆதாரம் ஜகத் ஜயசூரிய பற்றி சரத் பொன்சேகா கூறிய கூற்றில் பொதிந்திருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். பொன்சேகாவுக்கு வாக்களித்ததை நினைவுபடுத்தி அவர் இன்று செய்வது, சொல்வது சரியென்று எடுத்துரைக்க வேண்டும். தெற்கில் அவரது கொடும்பாவியை எரிக்கின்றார்கள் என்றால் வடக்கில் அவரின் படத்திற்கு மாலை போடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

thinakkural