சித்தாண்டி சித்திர வேலாயுதர் ஆலயத்தின் மயில்கட்டு விசேட திருவிழா

வரலாற்று புகழ் பெற்ற ஆலயங்களுள் சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்சவ கந்தனின் பெருவிழாவின் நேற்று விசேட மயில் கட்டுத் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக ஆலயத்தில் இடம்பெற்றது.

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்வ நாட்களில் மூன்று நாட்களைக் மயில் கட்டுத் திருவிழா எனும் விசேட யாக உற்சவம் இலங்கையில் இந்த கோயிலுக்கே தனிப் பெரும் சிறப்புப் பெற்றதாக நடைபெறுகின்றது.

மகோற்சவத்தின் பன்னிரெண்டாவது நாள் இன்றைய தினம் மயில் கட்டு விசேட யாக பூசை மகோற்சவ பிரதம குருக்கள்மார்களினால் இடம்பெற்றது.

ஆலயத்தின் மகோற்சவ பூசைகள் மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம்வந்த பின்னர் மயில்கட்டு எனும் தெய்வீக தன்மைவாய்ந்த யாக பூசை பல மணி நேரம் இடம்பெற்ற பின்னர் முருகப்பெருமானார் ஒளிப்பிளம்பாகத் தோன்றி மயிலேறும் தெய்வீக காட்சி இடம்பெற்றது.

மகோற்சவ காலத்தில் மயில்கட்டு எனும் விசேட பூசையைக் காண பக்தர்கள் இரவு முழுவதும் இடம்பெறும் பூசைகளில் கலந்துகொண்டு மயிலேறிய முருகன் வள்ளியைத் திருமணம் செய்துகொள்ளும் வரை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் ஆலயத்திற்கு பெரும் திரளான காவடிகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வருகைதந்ததுடன் எம்பெருமானார் சித்தாண்டி வேலனைத் தரிசித்தனர்.

ஆலயத்தின் பிரணவத் தீர்த்தோற்சவமானது புதன்கிழமை (6) காலை சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையில் இடம்பெறவுள்ளது.