இடமாற்றம் என்ற போர்வையில் பந்தாடப்படும் செயலாளர்கள் – வன்மையாக கண்டிப்பதாக துரைரெட்ணம் தெரிவிப்பு

(படுவான் பாலகன்)  கிழக்கு மாகாணத்தில் சிரேஸ்ட தரம்வாய்ந்த செயலாளர்கள், இடமாற்றம் என்ற போர்வையில் பந்தாடப்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(04) திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் மாகாணசபை உறுப்பினர் கூறுகையில்,

திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு கடந்த வியாழக்கிழமை இடமாற்றம் வழங்கப்பட்டது. இதில், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவுக்கும் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவின் செயலாளராக இருந்த திருமதி கலாமதி பத்மராஜா சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஏற்கனவே கடமையாற்றிய இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடானது, முப்பது வருடங்களுக்கு மேலாக அரச நிருவாகத்திற்கும், மாகாணசபைக்காகவும், யுத்தகாலத்திலும் கூட உழைத்த நல்ல சமூகசேவையாளர்களை பந்தாடுவதற்கு சமானாகும்.

ஒருவருக்கும் தெரியாமல், மாலை 04மணிக்கு பிற்பாடு இடமாற்றம் செய்துவிட்டு, மீண்டும் இடமாற்றத்தை இரத்து செய்வதானது ஆரோக்கியமான விடயமல்ல. அதேவேளை மன உளச்சலையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்த அதிகாரிகளை கேவலப்படுத்தும் விடயமாகவே பார்க்கின்றேன். இது தொடர்பாக இரு தமிழ் அமைச்சர்களும், ஏனைய அமைச்சர்களும் பார்வையாளர்களாக இருந்துவிட முடியாது என்றார்.