சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக் கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்

தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கு உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை உயர் நீதிமன்றத்திடமிருந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்புக் கிட்டியிருக்கின்றது என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டு அரசை அமைத்திருக்கின்றன.

எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக் கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்.

1972 அரசமைப்புக் கொண்டு வரப்பட்ட போது தர்மலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினரும் சேர்ந்து சில யோசனைகளை முன்வைத்தார். அது சமஷ்டித் திட்டம் அல்ல. அதிலும் குறைந்தது தான்.

தந்தை செல்வாவும் பல ஒப்பந்தங்கள், உடன்பாடுகளைச் செய்து இணக்கத்துக்கு வர முயன்றார். அவையும் சமஷ்டித் திட்டங்கள் அல்ல. அதற்குக் குறைவானவை தான்.

இவ்வாறு தொடர்ந்து சமஷ்டியை இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தி வந்துள்ள போதிலும் இணக்கத்தைக் காண்பதற்காக அதைவிடக் குறைந்த ஒன்றுக்கு நமது தலைவர்கள் உடன்பட சம்மதித்து வந்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.

நாமும் இப்போது ஓர் இணக்கத்துக்கு வர முயல்கின்றோம். ஆனால், சமஷ்டித் தீர்வை சரியாக வலியுறுத்தி நாம் பெறுவதற்கான உரிய சந்தர்ப்பம் இதுதான்.

பிரிவினையைக் கோருவதைத் தடை செய்யும் ஆறாவது திருத்தத்தை நமது அரசமைப்புக் கொண்டிருக்கத் தக்கதாக இப்போது உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கின்றது.

சமஷ்டியைக் கோருவது தவறல்ல, அதைக் கோரலாம், ஏன்ச சுயநிர்ணய உரிமையைக் கேட்பதைக் கூட பிழை என்று கூற முடியாது என்றுரைக்கும் தீர்ப்பு ஒன்றை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தச் சூழலே சமஷ்டியைக் கோரிப் பெறுவதற்குச் சரியான உகந்த தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றுபட்டு நல்லாட்சி அரசு அமைத்துள்ளன. தீர்வு விடயங்களையும் உள்ளடக்கிய அரசமைப்புக் குறித்துத் தமிழர்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மையினரையும் அரவணைத்துப் பேசும் சூழல் வந்திருக்கின்றது.

இத்தகைய உகந்த சூழல் உள்நாட்டில் முன்னெப்போதுமே கிட்டவில்லை.

வெளிநாட்டிலும் அப்படித்தான். இந்தத் தீர்வு முயற்சியில் உலகில் எந்த நாடும் தமிழர்களுக்கு எதிர்த் திசையில் இல்லை.

எல்லா நாடுகளுமே தீர்வை நோக்கிய நகர்வை வரவேற்கும் புதிய சூழல் நிலவுகின்றது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கிட்டியுள்ள இந்த உகந்த சூழலை நாம் வசமாகப் பயன்படுத்த வேண்டும்.

எமக்கு சமஷ்டித் தீர்வு தான் அவசியம் தவிர, அது தொடர்பான சொல்லாடல் அல்ல. எனவே, சொற்களைக் கைவிட்டு தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்களை உள்ளடக்கிய தீர்வுக்கு எம்மால் இயன்ற மட்டும் முயற்சிப்போம்.

அத்தகைய முயற்சி தோல்வி அடையக் கூடிய சூழல் ஏதும் இதுவரை தென்படவில்லை. ஆகவே, நாம் நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

அப்படி முயற்சி எடுக்கும் பொறுப்பைத்தான் மக்கள் வாக்குகள் மூலம் எங்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். ஆகவே, நாம் அதை விடாது தொடர வேண்டும்.

அந்த முயற்சியில் நாங்கள் தோற்கவே மாட்டோம் எனக் கூற மாட்டேன். சில சமயங்களில் தோற்கலாம். தோற்றால் தொடர்ந்து போராட நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம்.

எப்படி, எந்த மார்க்கத்தில் போராடுவது? அதை அப்போது தான் நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கும் அதுதான் முக்கியமானது எனவும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

srilanka muslim