ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது அமிர்தலிங்கத்தின் மகன் தாக்குதல்.

மூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது..

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன்,

“சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால் பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கட்சியினரால் நான் தாக்கப்பட்டமை மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியுள்ளது“ – என்றார்.

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்ததின நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு சிலை கட்டப்படுவது தொடர்பாக பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் எத்ர்க்கட்சித் தலைவர், இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தமது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டனர்.

கடந்த இருபத்தெட்டு வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும், சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாதென தெரிவிக்கும் சிறிய துண்டுபிரசுரமொன்றினை பரமேஸ்வரன் நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடையே தனது பெயருடன் விநியோகித்திருந்தார்.

இந்நிலையில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மிகப்பெரிய சன நாயக மீறல் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

IBC