மூத்த தமிழ் பத்திரிகையாளர்களில் ஒருவரான சின்னையா குருநாதனின் மறைவு குறித்து யாழ்.ஊடக அமையம்

இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாளர்களில் ஒருவரான சின்னையா குருநாதனின் மறைவு குறித்து யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது..

கடந்த 2016ஆம் ஆண்டு வரை 58 வருடங்களாக அந்த துறையில் இடையறாது தனது பணியை மேற்கொண்டு வந்த அவர், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி, தினக்குரல் மற்றும் உதயன் போன்ற தமிழ்ப்பத்திரிகைகளிலும் தமிழ் நெற் ஆங்கில இணையத்தளத்திலும் அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பதுங்கு குழியினில் இருந்து ஊடகப்பணியாற்றியதை தனது மரணத்தின் இறுதிக்காலத்திலும் அவர் இளம் ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொள்ள பின்னின்றதில்லை.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போதும் தனது ஊடகப்பணியினை விட்டு தப்பியோடாது முழுநேரமாக ஊடகப்பணியாற்றிய ஒரு சிலரினுள் அமரர் சின்னையா குருநாதனின் பெயரும் ஈழ தமிழ் ஊடக வரலாற்றினில் நிலைத்திருக்கும்.

தமிழ், ஆங்கில மொழிகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவும் ஆற்றலும், தான் சார்ந்த துறையில் அவர் கொண்டிருந்த பட்டறிவும் அவரை ஒரு சிறந்த ஊடகவியலாளராக சமூகத்தில் இனங்காட்டியிருந்தது.

மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் நன்மதிப்பினை பெற்றிருந்த ஒருசில ஊடகவியலாளர்களுள் சின்னையா குருநாதனும் ஒருவராவார்.

தனது மரணம் வரையினில் ஊடகவியலாளனாக இருந்துவிட அவர் கொண்ட ஆசை நிறைவேறியிருக்கின்றது.யாழ்.ஊடக அமையம் இறுதிக்காலத்தினில் தனித்துபோயிருந்த அந்த மூத்த ஊடகவியலாளனை தேடி தன்னால் இயன்ற உதவிகளை செய்திருந்தது.

இப்போது அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருக்கும் அரசியல் தரப்புக்கள் அவரை திரும்பிக்கூட பார்த்திருக்கவில்லையென்ற தகவலையும் அவர் கவலையுடன் பகிர்ந்து கொண்டதையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் யாழ்.ஊடக அமையம் தனது கவலைகளை பதிவு செய்து கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.

யாழ்.ஊடக அமையம்:-

(GTN)