கிழக்கு மாகாணத்திலே உள்ள வைத்தியசாலைகளுக்கு 110வைத்தியர்கள் தேவை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்திலே உள்ள வைத்தியசாலைகளுக்கு 110வைத்தியர்கள் தேவையாக இருக்கின்றனர். என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மொஹமட் நசீர் தெரிவித்தார்.

 

வைத்தியர்கள் இன்மையால் ஒருவர் இரு இடங்களிலும் சேவை செய்ய வேண்டிய நிலையேற்ப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில், நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை(01) நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.


மாகாண சுகாதார அமைச்சர் தொடர்ந்தும், அங்கு உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் எந்த இனத்தினையும் புறக்கணித்து நாம் செயற்படவில்லை. எமக்கு கிடைத்த இரண்டு வருடகால அமைச்சுப்பதவியினை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்திலே உள்ள மூவின மக்களுக்கும் சேவை செய்து வருகின்றோம். அந்நிலையில் ஒரு சமூகத்தினை புறக்கணித்து செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறிய கருத்து வேதனையளிக்கின்றது. கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பன இணைந்து செயற்படுகின்றோம். ஒற்றுமையாக இருக்கின்றோம். பத்திரிகைகளுக்காக பேசவேண்டாம்.
கிழக்கு மாகாணத்திலே உள்ள வைத்தியசாலைகளுக்கு 110வைத்தியர்கள் தேவையாக இருக்கின்றனர். அதேபோன்று தாதியர்கள், ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தேவையும் இருக்கின்றன. தற்காலிகமாக வைத்தியதேவையை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு வைத்தியர் இரு இடங்களில் சேவை செய்து கொண்டிருக்கும் நிலையும் இருக்கின்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு 220மில்லியன் ரூபாய் பணமே கிடைத்திருக்கின்றது. இந்நிதியினை கொண்டு எல்லா வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியாத நிலையுள்ளது. இதனால் மத்திய அரசின் நிதியொதுக்கீட்டினையும் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசுடன் இணைந்து செய்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.