ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டு சோறு.மகிழடித்தீவில் துரை.

(படுவான் பாலகன்) எமது மக்கள், எம்மிடம் பொறுப்பினை வழங்கிவிட்டு, தவளும் குழந்தையை எழுந்து ஓடு, ஓடு என்று சொல்வதுபோன்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில், நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
கிழக்கு விவசாய அமைச்சர் தொடர்ந்தும், அங்கு உரையாற்றுகையில்,
முப்பது வருடகாலமாக இழந்தவற்றை சுறுக்காக பெற்றுவிட வேண்டும் என நினைக்கின்றனர். அது தவறவல்ல. அதற்காகதான் நாமும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அவற்றினை சுட்டி, சொல்லுகின்றனர், சூட்டுகோல் எடுக்கின்றனர் முகப்புத்தகத்திலே கொடூரமாக முகத்தினை காட்டுகின்றனர். கடந்த காலங்களிலே எதிர்கட்சியில் இருந்துகொண்டு எங்கெல்லாம் தவறுகள் இடம்பெறுகின்றதோ, தமிழ் மக்களுக்கான குரல் ஒலிக்க வேண்டுமோ? அங்கெல்லாம், எதிர்கட்சியிலே இருந்துகொண்டு குரல்கொடுத்ததுடன், சொல்ல வேண்டிய இடங்களிலும் கூறினோம். இன்று அமைச்சுப் பொறுப்பினையேற்றதன் பின்பு, இம்மிடையே சுமக்ககூடிய பாரங்கள் அதிகமாகவுள்ளது. பொறுப்போடு செயற்பட வேண்டியிருக்கின்றோம். அதற்கேற்றவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் இன நல்லுறவினை ஏற்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசும், தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து ஆட்சியினை அமைத்திருக்கின்றோம். முன்னைய காலங்களிலும் இனநல்லுறவுடன் வாழ்ந்திருக்கின்றோம். “ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டு சோறு” என்ற பழமொழி இரு சமூகத்தினிடையே காணப்பட்ட இன நல்லுறவை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. தற்காலத்திலும் இனநல்லுறவோடும், நெருக்கத்தோடும், அபிவிருத்தியில் சமபங்கீட்டும் வாழ்வோம் என்றார்.