இந்த நாட்டிலே சிங்கள மக்கள் மாத்திரம் தான் வாழவேண்டும் என நினைத்த எனது எண்ணத்தை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மாற்றிவிட்டார்கள்.

(kamal)

நான் மேல்மாகாணத்திலே இருந்த போது நினைத்ததெல்லாம் இந்த நாட்டிலே சிங்கள மக்கள் மாத்திரம் தான் வாழவேண்டும் என நான் நினைத்திருந்தேன். நான் கிழக்கு மாகாணத்திற்கு வந்து தமிழ் மக்களோடு பழகிய பிற்பாடு அத்த நிலைப்பாட்டிலிருந்து முற்றாக மாற்றமடைந்து விட்டேன் என கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல தேரர் தெரிவித்தார்..

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ,திராய்மடு , பனிச்சையடி , நாவலடி , ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி  மட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை  நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக எச் .டி .கே .எஸ் ஜயசேகர    தலைமையில்   இடம்பெற்றது

நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நீங்கள் நினைக்கலாம் ஏன் கல்முனையிலிருந்து விகராதிபதி இங்கு வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கலாம். இந்த பொலிஸ் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த அழைப்பு தந்தாலும் அவர்களின் சேவைகளை பாராட்டக் கூடிய ஒருவராக மதத்தலைவர் இருக்க வேண்டும் என்ற வகையில்தான் நான் இந்த விழாவுக்கு வந்தேன்.

என்னைப்பற்றி நான் சொல்ல வேண்டும் இந்த பொலிஸ் நிலையத்தினால் செய்யப்படுகின்ற கண்ணியமான சேவை பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் காரணம் கல்முனை பிரிவு ஆலோசகர் குழுவின் தலைவராக நான் இருக்கின்ற காரணத்தினால் நான் இதனை சொல்லியே ஆகவேண்டும்.

நான் 2005 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு வந்த பிற்பாடுதான் எனக்கு நன்றாகவே தமிழ் பேச முடியும். நான் மேல் மாகாணத்தை சேர்ந்தவன்  மதகுருவாக இருக்க முதல் நான் பாடகராக இருந்தேன். இந்த மதகுருவாக வருவதற்கு  எனக்கு பாக்கியம் கிடைத்ததையிட்டு நான் பக்கியசாலியாக எண்ணுகின்றேன். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகாரணமாக கல்முனை பிராந்தியத்தை சேர்ந்த சகோதர மக்கள் அம்பாரை டீ.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்திலே  தங்கியிருந்தபோது எனக்கு அவர்களுக்கு சேவை செய்யவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிற்பாடு அந்த மக்கள் பெரிய விகாராதிபதியை சந்தித்து இவரை எங்களது கல்முனை விகாரைக்கு விகாராதிபதியாக்குங்கள் என்று மக்களால் கொடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே நான் கல்முனை விகாரைக்கு விகாராதிபதியாக நியமிக்கப்பட்டடேன்.

இக்காலத்திலே எனக்கு தமிழ் என்பதில் வணக்கம் என்றுகூட சொல்ல தெரியாது நான் மேல்மாகாணத்திலே இருந்து நினைத்ததெல்லாம் இந்த நாட்டிலே சிங்கள மக்கள் மட்டும் தான் வாழவேண்டும் என நான் நினைத்திருந்தேன். அப்படியான கருத்துகளையே நாங்கள் அக்காலத்திலே பேசினோம் ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு வந்த பிற்பாடு அந்த நிலைப்பாடு முற்றாக மாற்றமடைந்து விட்டது அதற்கு காரணம் இந்த தமிழ் மக்களோடு பழகி அவர்களோடு வாழக்கிடைத்தபடியால் அந்த தவறான எண்ணத்தில் இருந்து நான் மாற்றமடைந்து விட்டேன்.

இந்த நாடு எமது நாடு முதலில் எமது நாட்டை மதிக்கவேண்டும் என்பதை மட்டுமே இந்த நேரத்தில் நாங்கள்  சிந்திக்கவேண்டும். இந்த நாட்டை நாங்கள் நேசித்தால் மட்டுமே  இந்த நாட்டை முன்னேற்றமுடியும். மதத் தலைவர்களாகிய நாங்கள் மக்களுக்கு உதவி செய்யவேண்டியவர்கள் இதனை மேற் கொள்ளவிட்டால் நாங்கள் எந்த விதமான பிரயோசனம்  அற்றவர்களாக நாங்கள் கருதப்படுவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்…