அரசியலமைப்பு திருத்தம்; சு.கவின் யோசனைகள் அரசியலமைப்பு சபை நிலையியற் குழுவிடம் கையளிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகளை கடந்த வியாழக்கிழமை அரசியலமைப்புச் சபையின் நிலையியற் குழுவிடம் ஒப்படைத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலமைப்பின் வரையறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் இடைக்கால அறிக்கையை பூரணப்படுத்துவதற்காக சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்காக நிலையியற் குழு காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, நாட்டின் இயற்கை நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய நிலையில் பாரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இவ்வறிக்கை இம்மாதம் அரசியலமைப்புச் சபையில் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை செப்டம்பர் 06 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையியற் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலையியற் குழு கடந்த டிசம்பர் மாதம் முதல் தனது இடைக்கால அறிக்கையுடன் தயாராக உள்ளபோதும் சுதந்திரக் கட்சி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான தனது யோசனைகளை முன்வைப்பதில் அதிக தாமதம் செலுத்தி வந்தது. பிரதமர் தலைமையிலான நிலையியற் குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.