அபிவிருத்தியில் ஏற்படும் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.

(படுவான் பாலகன்) அபிவிருத்தியில் புறக்கணிப்பு ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ளும் நிலையில் எமது மக்கள் இல்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளை தரமுயர்த்துதல், அதற்கான ஆளணிகளை நிரப்புதல் போன்றவற்றில் இன்றும் இடைவெளிகள் காணப்படுகின்றன. எனவும் குறிப்பிட்டார்.

மகிழடித்தீவு வைத்தியசாலையில், புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை(01) நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு, உரையாற்றுகையில்,

கடந்த யுத்த காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு அபிருத்தியினை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து இல்லை. குறிப்பாக படகிலே போக்குவரத்து செய்ய வேண்டியுள்ளது. என்ற காரணங்களை குறிப்பிட்டு, அபிவிருத்திகள் நடைபெறவில்லை. இதனால் இன்றும் பல அபிவிருத்தி இடைவெளிகள் படுவான்கரையிலே காணப்படுகின்றன. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பும், குறிப்பாக வைத்தியசாலை தரமுயர்த்துதல், ஆளணிகளை நிரப்புதல் போன்றவற்றில் இன்றும் இடைவெளிகள் காணப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இணைந்து கிழக்கு மாகாணத்திலே இணக்க அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். இணக்க அரசியலின் சாட்சியங்களாக, தடயங்களாக கடந்த காலத்தில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்ட இடங்கள் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எங்கள் மத்தியில் இருக்கின்றது. யுத்தகாலப்பகுதியில் புறக்கணிப்புக்கள் நடைபெற்ற போது, ஓரளவு சகித்துக்கொள்ளும் நிலையேற்ப்பட்டது. யுத்தம் நிறைவுபெற்றதன் பின்பு அபிவிருத்தி விடயத்தில், இன்னும் இந்த பிரதேசங்கள் பாராமுகமாக இருக்கின்ற போது, அதனை சகித்துகொள்ளக் கூடிய நிலையில் எமது மக்கள் இல்லை.

வருகின்ற காலத்தில் அபிவிருத்தியில் இடைவெளிகள் ஏற்படுகின்றபோது, பல சந்தேகங்கள் எற்படக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. சந்தேகங்களை களைந்து, சகல விடயங்களிலும் இனத்துவம், தனித்துவம், சமத்துவம் என பேசகின்ற நாம், சமத்துவ அடிப்படையில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் சிறுபான்மை மக்களாக இருக்கின்றோம்.  தமிழர்களின் அபிவிருத்தியை முஸ்லிம்;கள் பறித்துக்கொள்வதோ, முஸ்லிம்களின் அபிவிருத்தியை தமிழர்கள் பறித்துக்கொள்ளும் நிலையோ இருக்ககூடாது. கடந்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றிருக்கின்றது. இதனை சில அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தவறுகள் எதிர்காலத்தில் இருக்காமல், அபிவிருத்தி விடயத்தில், சமமான, சமத்துவமான அபிவிருத்தி திட்டங்களை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது, பல வைத்தியசாலைகள் மூடப்பட்டன. அவற்றில் சில திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சில திறக்கப்பட்டவில்லை. அவ்வாறானவைகள் திறக்கப்பட வேண்டும். ஆளணிகளும் நிரப்பப்பட வேண்டும் என்றார்.