உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது எனவும் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் டிசம்பர் 12 ஆம் திகதி சாதாரண தரப்பு பரீட்சைகள் நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகள் பரீட்சைத் திணைக்களத்தின் கீழ் வர வேண்டும் எனவும் பரீட்சை திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பரில் தேர்தல் நடத்துவதற்கு வேறு திகதி இல்லாததால் ஜனவரியிலே தேர்தல் நடத்த முடியும் எனவும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதே வேளை உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநயாகர் கரு ஜெயசூரிய நேற்று கையொப்பமிட்டதாக சபாநயாகர் அலுவலகம் தெரிவித்தது.இதன் மூலம் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது.இருந்தாலும் புதிய சட்டத்தின் பிரகாரம் தற்பொழுது இருப்பதை விட 40 வீதத்தினால் உறுப்பினர் தொகை உயர்வதால் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் கடந்த மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.செப்டம்பர் 15 ற்கு முன்னர் சட்டத்தை நிறைவேற்றினால் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறியிருந்தார்.

ஆனால் பரீட்சை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதோடு 2018 ஜனவரி 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருடத்தினுள் தேர்தலை நடத்துமாறு எதிரணியினர் கோரி வருவது தெரிந்ததே.