மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது- கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள். ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது என்று கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நிருவாகக் கட்டடித்தினை ஆக்கிரமித்ததன் காரணமாக இயக்கமற்றிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னால் கடந்த 08ஆம் திகதி மதிய வேளை சீசிரீவி கமராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (01) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக் கல்வியை பயில வந்து இன்று நிர்வாகக் கட்டிடத் தொகுதியை ஆக்கிரமித்திருக்கும் மாணவர்களாகிய தங்களுக்கு பொறுப்பு வாய்ந்த ஊழியர் சங்கம் என்ற வகையில் தங்களின் மேலான கவனத்திற்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக கல்வி நடவடிக்கைகள் பல்வேறு காரணிகளால் தாமதமாவது நீங்கள் அறிந்ததே. தங்களது பட்டப்படிப்பு கல்வியாண்டு 03 (General) அல்லது 04 (Special) வருடங்களுக்குள் முடிவுற வேண்டும்.
இலங்கையில் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து பட்டப்படிப்பினை பயில வந்திருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உரிய காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தொழில்வாய்ப்பை பெற்று உங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது உங்களது தார்மீகப் பொறுப்பு. அதுவே எங்களினதும் விருப்பு.
எமது நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ள இன்றைய நிலையில் உங்கள் பட்டப்படிப்பும் தாமதமாவது மிகவும் கவலைக்குரியது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விடுதி வசதி வழங்கப்படுவதென்பது சாத்தியமற்றதொரு விடயம். சகல பல்கலைக்கழகங்களும் தங்கள் பல்கலைக்கழகங்களில் இருக்கும் சாத்தியமான வளங்களைப் கொண்டே மாணவர்களின் விடுதி வசதியைத் தீர்மானிப்பது நியதி.
பல்கலைக்கழகங்களுக்கான அரச நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தே இத்தீர்மானம் அமையும். இருப்பினும் எமது பல்கலைக்கழகத்தில் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்விடயத்தில் மாணவர் விடுதியில் உபவிடுதிக் காப்பாளர், விடுதிப் பராமரிப்பாளர், சிற்றூழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர், சுத்திகரிப்பு தொழிளாளர்களின் வேதனங்கள், மற்றும் மின்சாரம், நீர், தொலைபேசி, சுகாதார வசதிகள் என்பவற்றின் கொடுப்பனவுகளுக்கான நிதி என்பன பல்கலைக்கழகங்களுக்கு ஏலவே கிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அரச நிதிக் கொள்கை அனுமதிக்க வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏறத்தாள 5000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் ஏறத்தாள 2500 மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நிர்வாகமே தார்மீக பொறுப்பேற்க வேண்டும். எனினும் மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு நிர்வாகம் இச்சவாலை எதிர்கொண்டுள்ளது. விடுதி வசதி நியதியை மீறி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது மாணவர் நலன் குறித்தும்; சிந்திக்க வேண்டிய கடப்பாடு பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. நீர் வசதி, சுகாதாரப் பிரச்சினைகள், இட நெருக்கடிகளால் மாணவர்களிடையேயான முரண்பாடுகள், மன உளைச்சல்கள் என்பவற்றுக்கும் நிர்வாகமே பொறுப்புக் கூற வேண்டும்.
விடுதிகளில் நெருக்கடி காரணமாக மாணவர்களால் ஏற்படுத்தப்படும் இன்னோரன்ன பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் நிர்வாகத்திற்கு தலையிடியாக அமைவதும் பழக்கப்பட்டதொன்றாகிவிட்டது.
இவையனைத்தையும் கருத்திற்கொண்டே பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் அவதானமாக விடுதி வசதிகளை வழங்குகிறது.
மாணவர்கள் மேற்கொள்ளும் பகிடிவதைகள், ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றுக்கெதிரான தண்டனைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இவை பற்றிய தெளிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் பல்கலைக்கழக விதிக்கோவை (University Act) என்பவற்றுக்கமைவாக ஒழுக்கக் கோவை((Student Charter), உபவிதிகள் (by Law) என்பவற்றினூடாக அனைத்து மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் முறைகேடான நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகள் சாட்சியங்களுடன் கிடைக்கப்பெறுமிடத்து முறையான விசாரணைகளின் (Inquiry) பின்னரான பேரவையின் (Council) விதந்துரைப்புடன் பாரபட்சமின்றி தண்டனைகளை வழங்கவேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்குள்ளது.
இவ்வாறான நடவடிக்கை மாணவர்களை நன்நெறிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக மாற்றி சமுதாயத்தின் தலைவர்களாகவும் உயரிய கல்விமான்களாகவும் உருவாக்குவதற்கான வழிமுறையே அன்றி மாணவர்களை பழிவாங்குவதற்கான நடவடிக்கைகளல்ல. இருந்தும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டை எழுத்து மூலமாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு இன்றுவரை குறைந்த தண்டனைகளையே வழங்கி வந்துள்ளதென்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள்.
ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக உங்கள் முறையற்ற செயற்பாடுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியரினதும் அடிப்படை தொழில் உரிமையை மீறுவதாக உள்ளதுடன் அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் பாரிய இடைஞ்சலாக இருப்பது வெளிப்படை.
இவ்வாறான தங்களது செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அது பல்கலைக்கழத்தை அண்டிய சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவெடுத்துவிடுமோ என்ற அச்சமும் எமக்குள்ளது.
எனவே, அன்பார்ந்த மாணவ மாணவிகளே, உங்களை தவறாக வழிநடத்தும் பின்புலங்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாத நிலையில் உங்களை நீங்களே உணர்ந்து கொண்டு உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தேவையானதும் பொருத்தப்பாடுடையதுமான செயற்பாடுகளை மேற்கொள்வீர்களாகவிருந்தால் அதுவே நீங்கள் உங்களது பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடாக அமையவேண்டும் என்பதுடன், எங்களினது எதிர்பார்ப்பும் அதுவேயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நிருவாகக்கட்டட முற்றுகையிலீடுபட்டுள்ள மாணவர்களுக்கு சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சுப்பிரதிகளாக விநியோகிக்கப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.