மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நிறைகுறைவானவர்களின் எண்ணிக்கை குறைவு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நிறைகுறைவானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதற்கு மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுகளே காரணமென மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அ.சண்முகநாதன் தெரிவித்தார்.

இளம் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சமுதாய அடிப்படையிலான முன்னேற்றகரமான போசாக்கு திட்டத்தினை  புதன்கிழமை, முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள உக்டா சமூகவளநிலையத்தில்  ஆரம்பித்து வைத்து பேசுகையிலே இதனைக் குறிப்பிட்டார்.

வேள்விஸன் நிறுவனமும், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் இச்செயற்றிட்டத்தினை முன்னெடுக்கின்றனர். இவற்றின் செயற்பாடாக பிரதேசத்தில் உள்ள அன்னையர் குழுக்களுக்கு போசாக்கான உணவுகளை தயாரிப்பது தொடர்பிலான செயலமர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு வைத்திய அதிகாரி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஐந்து வயதுக்கு குறைவான வயதுடையவர்களில், 2014ம் ஆண்டு 11.1வீதத்தினர் நிறைகுறைவானவர்களாக காணப்பட்டனர். 2015ம் ஆண்டு 14.7வீதமாகவும், 2016ம் ஆண்டு 10.8வீதமாகவும் காணப்பட்டனர். கடந்த வருடங்களில் இருந்து பார்க்கின்ற போது, 2016ம் ஆண்டு குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் பிரதேசத்திலே உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களும் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமையே ஆகும். பிரதேசத்தில் நமக்க தேவையான அனைத்து போசணைகளையும் கொண்ட உணவுகள் இருக்கின்றன. அவற்றினை முறையாக நாம் பயன்படுத்தவில்லை. இதனாலேயே போசாக்கு குறைவான பிள்ளைகள் சமூகத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். அதேபோன்று 2014ம் ஆண்டு குள்ளமான 5வயதுக்கு குறைவான பிள்ளைகள் 9வீதமாக காணப்பட்டனர் 2016ம் ஆண்டு 7.8வீதமாக இருக்கின்றனர். இதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றன. அதேபோல மெலிவான பிள்ளைகள் 2015ம் ஆண்டிலே 8.46வீதமாக காணப்பட்டது. 2016ம் ஆண்டு 8.1வீதமாக மாற்றமடைந்திருக்கின்றன.

பிறப்பிலே நிறைகுறைவாக பிறக்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த வருடங்களை விட 2016ம் ஆண்டு அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக 2014ம் ஆண்டு 11.2வீதமும், 2015ம் ஆண்டு 12.6வீதமும், 2016ம் ஆண்டு 13.2வீதமுமாக காணப்படுகின்றது. இதனை குறைப்பதற்காக பாடசாலை மட்டத்திலே பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதன் பயனாக எதிர்;காலத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.

இந்நிகழ்வில், தாதிய சகோதரி செல்வசோதி உதயகுமார், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் இ.மைக்கல், வேள்ட்விஸன் நிறுவன வலய இணைப்பாளர் பே.லோகிதராசா, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் த.கரதூசனன், திட்ட இணைப்பாளர் என்.யேசுதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.