வாக்குறுதிக்கமைய செயல்படாமல் தமது நிலைப்பாட்டை காப்பாற்றிக் கொள்ளும் முகமாக அரசியல் செய்வது கேவலமானது

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக கூறிக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் அடிவருடிகளாக இருந்த தென்னிலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியும் பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைய செயல்படாமல் தமது நிலைப்பாட்டை காப்பாற்றிக் கொள்ளும் முகமாக அரசியல் செய்வது கேவலமானது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசியலமைப்பு 100 நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தென்னிலங்கை ஐ.தே.க அடிவருடகளாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அதனைப் பற்றி பேசுவதில்லை.

உள்ளுராட்சிசபை தேர்தல் சம்பந்தமாக தனது அதிருப்தியை தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவர்கள் ஊடகங்களுக்கு தமது எதிரான கருத்துகளை தெரிவித்து விட்டு அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்திருப்பது கேவலமானது.

அதே போல் தென்னிலங்கை தமிழ் கட்சிகளில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலமாக தமது கூட்டணியின் நிலைப்பாட்டை மாற்றியிருக்கின்றார்கள். இவை அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் சூழ்ச்சி தான் காரணம்.

ஜனாதிபதியின் ஊடாக இது சம்பதமான கலந்துரையாடலின் போது நாடகமாடிய அமைச்சர்கள் அடுத்த நாள் நுவரெலியா மாவட்ட பிரதேசசபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என்ற செய்தியினை அமைச்சர் பைசர் முஸ்தபா மூலமாக வெளியிட்டு தமது வெற்றியினை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்களால் நடைபெறவிருக்கும் பிரதேசசபை தேர்தலிலே இவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதன் பின்பு வரும் தேர்தலில் கூட அவர்களால் இவற்றை செய்ய முடியாது. மக்கள் ஏமாற்றும் முயற்சிகளிலே இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்படுகின்றார்கள்.

தாங்கள் பொதுத்தேர்தலிலே கொடுத்த வாக்குறுதியின் படி வடகிழக்கு இணைப்பு சமஷ்டி என்ற இரண்டையுமே மறந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டு கும்மாளம் இடுகின்றது. தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற தென்னிலங்கை தலைமை ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடிவருடிகளாக செயல்படுவது தெளிவாகின்றது.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனாவின் உறவினர். அவரது நிலைப்பாட்டைத் தான் இவர் எப்பொழுதும் முன்னெடுப்பார். இவரை நம்பிய தமிழர்களை தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் தான் காப்பாற்றுவார் என முன்னாள் பிரதி அமைச்சரான பிரபா கணேசன் விடுத்துள்ள ஊடக அறிகயில் தெரிவித்துள்ளார்.