செங்கோலை கழிவறைக்கு எடுத்துச்சென்ற ஐ.தே.க உறுப்பினர்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் 27 வாக்குகளால் நேற்று தோற்கடிக்கப்பட்டது.

உறுப்பினர்களுக்கு இடையிலான முறுகல் நிலைக்கு மத்தியில், சட்டமூலம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தென் மாகாண சபையின் விசேட அமர்வு இன்று நடத்தப்பட்டது.

திருத்தத்துடனான சட்டமூலத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு ஆளுநர் அறிவித்துள்ளதாக, முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா இதன்போது சபைக்குத் தெரிவித்தார்.

அதன்பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர், சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், சபையிலிருந்து தாம் வௌியேறுவதாகவும் அறிவித்தனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சந்தன பிரியந்த செங்கோலை எடுத்துச்சென்றார்.

மாகாண சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள கழிவறைக்குள் அவர் செங்கோலை எடுத்துச்சென்றார்.

இதனையடுத்து, உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால், செங்கோல் இரண்டாக உடைந்ததுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் செங்கோலை மீண்டும் சபைக்கு கொண்டு வந்தனர்.

இதன்பின்னர் சபை மீண்டும் கூடியது.

இந்த சந்தர்ப்பத்தில் தென் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் மாத்திரம் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

பின்னர், 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அதற்கு எதிராக 27 வாக்குகள் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ரி.வீ.கே. காமினி சபையில் பிரசன்னமாகியிருந்த போதிலும் அவர் வாக்களிக்கவில்லை.

சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக, தென் மாகாண சபையின் தவிசாளர் கே.ஏ சோமவங்ச அறிவித்தார்.

Newsfirst