இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும்

இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும்!*
*சாய்ந்தமருதுக்கு புதிய பிரதேசசபை உருவாவதை வரவேற்கின்றோம்!*
*கரவாகுஇலக்கியச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் !*

(சகா)*

இலக்கியத்தினூடாக இனஜக்கியத்தை வளர்க்கமுடியும். அதற்கு இந்த
கரவாகுஇலக்கியச்சந்திப்பு நல்ல உதாரணம். இதனை வழிநடாத்துகின்ற தம்பி ஜனூசை
பாராட்டுகின்றேன்.

*இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவு மாளிகைக்காட்டில் நடைபெற்ற பிரபல எழுத்தாளர்
கோவிலுர் செல்வராஜனின் ‘ஊருக்குத்திரும்பணும்’ சிறுகதைநூலின்
அறிமுகவிழாவின்போது பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு  உரையாற்றுகையில்
தெரிவித்தார்.*

*கரவாகு கலை இலக்கிய மன்றம்  ஏற்பாடுசெய்த 9வது அமர்வில் கவிக்கோ
அப்துல்ரகுமான் நினைவரங்கும் கோவிலூர் செல்வராஜனின் ஊருக்குத்திரும்பணும் நூல்
அறிமுகவிழாவும் நடைபெற்றன.*

*இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளருமான எழுத்தாளர்
சம்சுதீன்ஜனூசின் ஏற்பாட்டில் மணிப்புலவர் மருதுர் ஏ மஜீத் தலைமையில்
மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் நேற்றுசனிக்கிழமை பகல் இந்நிகழ்வு
நடைபெற்றது.*

*உணர்வுகளுக்கம் உரையாடல்களுக்கும் களமமமைக்கும் கரவாகு இலக்கியச்சந்திப்பின்
9வது அமர்வு பற்றிய அறிமுகவுரையையும்  வரவேற்புரையையும்  ஏற்பாட்டாளர்
ஊடகவியலாளர் சம்சுதீன் ஜனூஸ் ஆரம்பத்தில் நிகழ்த்தினார்.*

*ஊருக்குத்திரும்பணும் நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் விபுலமாமணி
வி.ரி.சகாதேவராஜா நயவுரையை விமர்சகர் ஜெஸ்மி எம். மூசா வாழ்த்துப்பாவை
அக்கரையூர் அப்துல்குத்தூசும் நிகழ்த்தினர்.*

*முன்னதாக மறைந்த  கவிக்கோ அப்துல் ரகுமானுக்காக இருநிமிடநேரம் மௌனஅஞ்சலி
செலுத்தப்பட்டது. *

*அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:*

*சாய்ந்தமருது புதிய பிரதேசசபை உருவாக்கப்படுவதை நாம் பூரணமாக வரவேற்கின்றோம்.
இப்புதிய பிரதேசசபை சாய்ந்தமருது முஸ்லிம் மக்களின் உரிமைகள் நலன்களைப்
பாதுகாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.*

*சாய்ந்தமருதுக்கு எந்த அடிப்படையில் பிரதேசசபை உருவாக்கப்படுகின்தோ அதற்கு
ஒப்பானதாக கல்முனை வடக்கிற்கும் பிரதேசசபை உருவாக்கப்படவேண்டும்.*

*சாய்ந்தமருது பிரதேசபை விவகாரத்திற்கு எவ்வாறு தமிழ்மக்கள் தமது பூரண ஆதரவை
நல்கினார்களோ அதேபோன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம்மற்றும் பிரதேசபைக்கு
முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.*
*இந்த விடயத்தை நேற்றுமுன்தினம் நான் பாராளுமன்றத்திலும் பேசினேன்.*
*இப்படியான விட்டுக்கொடுப்புகள் மூலமே இரு இனங்களும் நிம்மதியாகவும்
ஜக்கியமாகவும் சந்தோசமாகவும் வாழமுடியும்.வீண்பிரச்சனைகளைம் தவிர்க்கமுடியும்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.*

*கடந்த காலங்களில் இப்பகுதி தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு அந்நியோன்யமாக
மிகவும் சந்தோசமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். முன்னோர்கள் மூத்தோர்கள்
சொன்னதைக் கேட்கின்றபோது எத்துணை சந்தோசமாகஇருக்கின்றது.இங்கு பேசிய
தொழிலதிபர் இப்றாகிம் அவர்களும் நாம் அன்று எப்படி இருந்தோம் என்பதுபற்றிக்
குறிப்பிட்டார்.*

*சிலவேளைகளில் அரசியல்வாதிகள் தமது சொந்த சுய இலாபங்களுக்காக
சமுகத்தைக்கூறுபோட்டு வந்துள்ளனர். அதனால் உண்மையில் பாதிக்கப்பட்டது அப்பாவி
சமுகங்களே. வீணான முரண்பாடுகளும் வீணாண இழப்புகளுமே எஞ்சின.யாரும் யாரையும்
அடக்கி வாழமுற்பட்டால் எஞ்சுவது நிம்மதியின்மையும் சந்தேகமுமே.*

*எனவே அவற்றை இனியும் அனுமதிக்கக்கூடாது. ஒற்றுமையாகவாழந்தால் மாத்திரமே
எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெறும். அதனூடாக சந்தோசமாகவும் வாழமுடியும்.
என்றார்.*

*ஏற்புரையை எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் வழங்கினார். பாடசாலை அதிபர்
எம்.ஜ.எம்.இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் எம்.ஜ.எம்.நயீம்
நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்துவழங்கினார்.முதல் பிரதிகளை பாராளுமனற் உறுப்பினர்
கோடீஸ்வரன் வழங்கிவைத்தார்.*

*இரண்டாம் கட்டமாக கவிக்கோ அப்துல் ரகுமான் தொடர்பிலான கவியரங்கு இடம்பெற்றது*