27வருடங்களின் பின் கதறிஅழுது தீர்த்த திராய்க்கேணி தமிழ்மக்கள்!

 
 ( சகா)
 
அம்பாறை திராய்க்கேணிக்கிராமத்தில் 52 தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட பூர்த்தி நிகழ்வு (25) வெள்ளிக்கிழமை காலை கிராமத்தலைவர் சின்னத்தம்பி கார்த்திகேசு தலைமையில் மிகவும் உணர்வுபூர்வமான நிலையில் நடைபெற்றது..

 
பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டு பொதுச்சுடரை ஏற்றிவைத்ததுடன் நினைவுத்தூபிக்கான நினைவுப்படிமக்கல்லையும் திறந்துவைத்தார். 
 
கூடவே சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் கிராம உத்தியோகத்தர் கே.நல்லரெத்தினம் வடகிழக்கு சமுக அமைப்பின் பிரதிநதிகளான லவன் கண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
 
திராய்க்கேணிக்கிராமத்தில் 1990ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட 52 பேர் நினைவாக நேற்று அங்கு நினைவுத்தூபி கட்டுவதற்கான அடிக்கல்நடு நிகழ்வு  நடைபெற்றது.அதற்கான நினைவுப்படிமக்கல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
 
முன்னதாக 1990 முதல் 2017 வரை இவ்விதம் அழிக்கப்பட்ட மக்களுக்கென ஒருவீடுகூட கட்டிவழங்கப்படாத நிலையில் ஜேர்மனியைச்சேர்ந்த மகான் என்பவர் மானிப்பாய் இந்தக்கல்லூரி பழையமாணவர் சங்க உதவியுடன் சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் இங்கு 16வீடுகளைக்கட்டிக்கொடுக்க முன்வந்திருந்தார்.அதற்கான அடிக்கல்நடுவிழா நேற்று  பிரதமஅதிதியான அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உள்ளிட்டோர் அடிக்கல்நட்டுவைத்தனர்.
 
மக்கள் கதறி அழுது தீர்த்தனர்!
 
கடந்த 27வருடங்களில் இப்படியானதொரு ஒழுங்கமைக்கப்பட்ட நினைவுதின நிகழ்வு நேற்றுத்தான் முதல் தடவையாக நடைபெற்றது. அதற்குமுன்பு சிறியளவில் ஆங்காங்கே சிறுசிறு வைபவம் இடம்பெற்றிருந்தன.
 
அதனால் நேற்றையதினம்  அங்குகூடிய உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒப்பரிவைத்து அழுதனர். அவ்வாறு அவர்கள் கதறியழுதமை பலரையும் மன நெகிழவைத்தது.
 
அங்கு படுகொலை செய்யப்பட்ட 52பேரின் பெயர் விபரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.
 
மேலும் அவர்களின் உருவப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்பாக இருந்த பொதுச்சுடரை அதிதிகள்  ஏற்றியதும் உருவப்படத்திற்கு அவரவர் குடும்ப உறவுகள் அகல்விளக்கை தீபமேற்றினர்.
 
அத்தருணம் அவர்கள் ஓவென்று அழத்தொடங்கிவிட்டனர். கண்ணீர் மல்க கதறிக்கதறி அழுதனர். படங்களைப்பார்த்துப் பார்த்து அழுதனர். அழுகையை நிறுத்தி மௌன அ10த்மார்த்த பிரார்த்தனை நடாத்த சிரமமாகவிருந்தது.
 
ஒரு பெண்மணி அழுது மயக்கமுற்று வீழ்ந்துவிட்டார். அவரைகைத்தாங்கலாக இன்னுமொருவர் அழைத்துச்சென்றார்.
பின்னர் தலைவர் சி.கார்த்திகேசு வரவேற்புரையுடன் கூடிய தலைமையுரையை நிகழ்த்தினார்.அவர் உரையைத் தொடரமுடியாமல் அழுது கஸ்ட்டப்பட்டதைக்காணக்கூடியதாயிருந்தது.
 
பின்னர் பிரதமஅதிதியான பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உரையாற்றினார். தொடர்ந்து கிராமசேவையாளர் கே.நல்லரெத்தினம் சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் பிரதிநிதி லவன் ஆகியோர் உரையாற்றினர். கிராம பிரதிநிதி கே.யோகநாதன் நன்றியுரையாற்றினார்.
 
நிகழ்வுஇடம்பெற்ற வளாகத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் பகல்பூசையும் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற்றது.