மயிலந்தனைக்கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அஹிம்சா நிறுவனம் நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட  மயிலந்தனைக்கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்  அஹிம்சா சமூக நிறுவனம்  பல செயற்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமாக அவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

முப்பது வருட போரினால் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளான கிராமங்களில் மயிலந்தனைக் கிராமமும் ஒன்று. இது கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள ஓர் எல்லைக் கிராமமுமாகும். 1992ம் ஆண்டு இக்கிராமம் முற்றாக அழிக்கப்பட்டதோடு பல உயிர்களையும் இக்கிராமம் இழந்திருந்தது.

தற்போது 96 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தின் பல்வேறு தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அஹிம்சா சமூக நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றது.

அதன் முதற்கட்ட நடிவடிக்கையாக போசாக்கு குறைந்த சிறுவர்களைக் கொண்ட 8 வறிய குடும்பங்கள் மற்றும் மிக வறிய நிலையில் உள்ள ஒரு வயோதிபக் குடும்பமும் அடையாளம் காணப்பட்டிருந்தது.

அக்குடும்பங்களினது வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதனூடாகவே சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்த முடியும் என அக்குடும்பங்கள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமத் தலைவர்கள் முதலானோர் ஒன்றாக கருத்து தெரிவித்திருந்தனர்

நோர்வேயில் டாக்கடர் நிமலநாதன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் நோர்வீஜியன் வள நிலையத்தின் நிதி அனுசரனையுடன்; குறிப்பிட்ட குடும்பங்களுக்கு அவர்கள் மேற்கொண்டு வரும் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களை மேலும் பலப்படுத்துவதற்காக தலா ஐம்பதாயிரம் ரூபா பணத்தினை இரு கட்டங்களில் வழங்குவதென்ற தீர்மானம் சகல தரப்பினரதும் சம்மதத்துடன் எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க ஆட்டுக்காலை மற்றும் கோழிக்கூடு என்பவற்றை விரிவு படுத்தி அமைத்துக் கொண்டதற்கான அல்லது புதிதாக அமைத்துக் கொண்டதற்கான கொடுப்பனவு தலா ரூபா 20,000 – இருபதாயிரம் ரூபா –  குறிப்பிட்ட ஒன்பது குடும்பங்களுக்கும் இன்று அஹிம்சாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நோர்வேயிலிருந்து இலங்கை வந்திருந்த காசிநாதர் நிர்மலன் அவரது மனைவி மற்றும் பிரதேசத்தின்; கிராம உத்தியோகத்தர் ஜெயக்குமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவறஞ்சினி, கிராமத்துத் தலைவர்கள் கிராமத்து மக்கள், அஹிம்சா சமூக நிறுவனத்தின் தொண்டர்கள் அதன் ஆலோசகர்  முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்

இக்கிராமத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் அஹிம்சா நிறுவனத்துக்கும் அந்நிறுவனத்தினூடாக மயிலந்தனைக் கிராமத்தை அபிவித்தி செய்ய நிதியுதவி அளிக்க முன் வந்திக்கும் நோர்வே குழுவினர்க்கும் இத்தருணத்தில் தங்களது இதயபூர்வமான நன்றியை மயிலந்தனை மக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

அதே வேளை இலங்கைக்கு வந்திருந்த தருணத்தில் மயிலந்தனை மக்களைப் பார்த்து அவர்களது நலன் விசாரிக்கவெனவும் அவர்களது முன்னேற்றத்துக்கு ஏனையோருடன் சேர்ந்து தன்னாலான பங்களிப்பு செய்வதற்கெனவும் புலம் பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் காசிநாதர் நிர்மலன் அவர்களும் அவரது மனைவியும் மயிலந்தனை வந்திருந்து திம்பியிருந்தனர் என்பது இங்கு விஷேடமாக குறிப்பிடத் தக்கது.