சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை! உண்மையை தெளிவுபடுத்தவே ஊடகமாநாடு என்கிறார் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல்தலைவர் ஹனிபா மாஸ்டர்!

(காரைதீவு நிருபர் சகா) சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை என்பது சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டு மொத்தமான கோரிக்கை ஆகும். அனைத்து கட்சிகளினதும் அங்கீகாரம் பெற்ற இக்கோரிக்கை நிறைவேறும் காலம் கனிந்து இருக்கிறது. எனவே இன மத பிரதேச வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒத்துழைத்து அதனைப்பெற வேண்டுகின்றோம்.

இவ்வாறு சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை தொடர்பான அவசரமாகக்கூட்டிய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா(ஓய்வநிலை அதிபர்) தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநாடு சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் வளாகத்திலுள்ள அலுவலக கேட்போர்கூடத்தில் (21) திங்கட்கிழமை இரவு 7மணிக்கு நடைபெற்றது.
அங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில்:

இன்று எமது கோரிக்கை கனியும்  தறுவாயிலுள்ளது. அதனை தடைசெய்ய சிலர் அறியாமை காரணமாக தலைப்பட்டுள்ளனர். கல்முனைத் தொகுதி மக்களுக்கு சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையின் இன்றைய நிலை தொடர்பாக உண்மையைத் தெளிவுபடுத்துவதே இன்றைய ஊடக சந்திப்பின் நோக்கம்.

கல்முனைக்குடி மக்களும் சாய்ந்தமருது மக்களும் அன்றிருந்த மாதிரி மீண்டும் மிகவும் ஒற்றுமையாக வாழவேண்டும்.

இன்றையகூட்டத்தின்நோக்கம் யாரையும் தூசிப்பதோ யாரையும் குறைசொல்வதோ அல்ல. நாம் யாரினதும் உரிமையைப் பறிக்கவில்லை. எமது உரிமையைத்தான் கேட்கின்றோம். சகலகட்சிகளதும் அங்கீகாரம் ஒத்துழைப்போடுதான் எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சகல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாகத்தானுள்ளனர். அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அப்படியே. சகோதரர் டாக்டர் ஜமீல் எமக்கு பக்கபலமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

நாம் சாத்வீக வழியில் வெல்வோம். வன்முறையோ விதண்டாவாதமோ தேவையில்லை.எமது தேவையற்ற சில செயற்பாடுகளின் ஊடாக எதிரியை பலப்படுத்தக்கூடாது. ஒன்றுபட்டு உழைப்போம் வாருங்கள். என்றார்.