வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள அமைச்சுக்களுக்கு குணசீலன், சிவநேசன் தெரிவு

வட மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் எஸ்.சிவநேசன் ஆகியோரை தெரிவு செய்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு இன்று முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிபாரிசை ஏற்று அமைச்சுப் பதவியொன்றை வழங்க முடியாமைக்கு வருந்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர், விந்தன் கனகரத்தினத்திற்கு அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சை எடுத்து நடத்துவதற்கு போதிய அனுபவ ஞானம் உள்ளதை வெளிப்படுத்தியமைக்காக அவரைப் பாராட்டியுள்ள முதலமைச்சர், பலருடன் கலந்தாலோசித்த பின்னர் சுகாதார அமைச்சுக்கு தொழில் ரீதியாக உரிய தகைமைகள் உடையவரே பொருத்தமானவர் என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மாகாண போக்குவரத்து அமைச்சை உரியவாறு தொழிற்திறனுடன் முன்னெடுப்பதற்கு தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விந்தன் கனகரத்தினத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதியுடன் மற்றுமொரு கடிதத்தையும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவிற்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

வட மாகாண அமைச்சரவையில் இருந்து பா.டெனீஸ்வரனை ஏற்கனவே நீக்கிவிட்டதாக ஶ்ரீகாந்தாவிற்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.