சிங்களப் பெயர்களிலான கடன்களை உணர்ந்து  தமிழ் மக்களால் பயன்பெற முடியவில்லை.

மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, ஒரு தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோய் உள்ள இடத்தை அறிந்து, அதற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் தாங்கள் தெரிவித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் பொதுமக்கள் பாவனைக்குள்ள அரசாங்கப் படிவங்கள் அனைத்தையும் மும் மொழிகளிலும் மொழி பெயர்க்கும் பணியைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாகவும்  ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த முயற்சி பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 22.08.2017 தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனிடம் 23/2இன் கீழ் கேள்வியை முன்வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,
இதுவரையில் எமது நாட்டை ஆட்சி செய்து வந்துள்ள அரசாங்கங்களின் மூலமாகவும், தற்போதைய அரசாங்கத்தின் மூலமாகவும் பல்வேறு மக்கள் பயன்பாட்டுத் திட்டங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, செயற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இந்த அரசு ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர், நில மெஹெவர எனும் செயற் திட்டம் ஜனாதிபதி அவர்களது துறை சார்ந்து ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதே போன்று, அண்மையில் நிதி அமைச்சர் அவர்களால் சில மக்கள் பயன்பாட்டுக் கடன் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
மேற்படி திட்டங்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழிச் சொற்களில் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக, தமிழ் மொழி மாத்திரம் அறிந்த மக்களால் அந்தத் திட்டங்களை உணர்வுபூர்வமாக உணர்ந்து, உள்வாங்கி, அவற்றின் மூலமான பயன்களை உரிய வகையில் பெற்றுக் கொள்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டு வருகின்றது. இத்தகைய செயற்திட்டங்கள் தமிழ் மொழி மூலமாகவும் வழங்கப்படுகின்ற நிலையிலேயே எமது மக்களால் அவற்றை உணர்ந்து, ஏற்று பயன்பெற வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் கடந்த காலங்களில் ‘திவி நெகும’ செயற்திட்டத்திற்கு ‘வாழ்வின் எழுச்சி’ எனவும்,  ‘பிம் சவிய’ செயற்திட்டத்திற்கு ‘நில சக்தி’ எனவும் தமிழில் பெயரிட்டு வழங்குவதற்கும், இன்னும் சில ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் எம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இதற்கு முன்பிருந்த அரசுகளாலும், தற்போதைய அரசாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள – அறிமுகப்படுத்தப்படுகின்ற இத்தகைய செயற் திட்டங்களின் சிங்கள மொழிப் பயன்பாட்டுச் சொற்களை தமிழ் மொழியிலும் மொழிமாற்றம் செய்து, அதனுடன் இணைத்து வழங்குவதற்கு தங்களது அமைச்சின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியதுடன், இக்கேள்விக்கான பதிலையும், அதற்கான நடவடிக்கையையும் விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.