காணாமல் போனோர் குறித்த முடிச்சை எரிக் சொல்ஹெய் அவிழ்க்க முடியும்.

நோர்வேயின்  முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து  கிடப்பதாகவும் காணாமல்  போனோர் குறித்த முடிச்சையும் அவரால்  அவிழ்க்க முடியுமென  தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மையில் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம்  வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்  படையினரால்  பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும் இது ஒரு மோசமான குற்றச் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னர் அவரது வாயிலிருந்து இந்த விடயம் வெளிவந்துள்ளது.  அவரிடம் யுத்தம் தொடர்பிலான பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. சரணடைந்த விடயம் குறித்தும் ஒரு சில விடயங்களை உதிர்த்துள்ளார்.

எனவே  அவருக்கு பல உண்மைகள் தெரியும். காணாமல் போனோர் குறித்த விடயத்தில் முடிச்சை அவிழ்க்க  அவரால் முடியுமென நான் நம்புகிறேன் என்றார்.

thinakkural