அழைப்பு விடுக்காமலே தமிழரசுகட்சி பகிஸ்கரித்திருக்கின்றது.

(படுவான் பாலகன்) தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், தூபியை அண்மித்த பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்குமே இந்நிகழ்விற்காக அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து எந்தவித அரசியல் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கவில்லை. இச்செயற்பாட்டை அரசியல்நோக்கத்திற்காக செய்யவுமில்லை. ஆனால் தமிழரசுகட்சியினர் இதனை பகிஸ்கரிப்பதாக கூறியிருக்கின்றனர். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டார்.

 
1987, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியினை  புனரமைப்பு செய்து, திறக்கும் நிகழ்வு நேற்ற(21) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே, இதனைக் குறிப்பிட்டார்.
மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும், அங்கு உரையாற்றிய போது,


2002ம் ஆண்டு அமைக்கப்பட்ட இத்தூபியானது, 2007ம் ஆண்டு சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்டு 10வருடங்கள் கடந்த நிலையிலும், புனரமைப்பு செய்யப்படாமலே இத்தூபி காணப்பட்டது. இவ்வருடம் ஆரம்பத்தில் நினைவு நிகழ்வு இத்தூபியில் நடாத்துகின்ற போது, இதனை புனரமைப்பு செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, அதற்கமைய இறந்தவர்களுக்கு கொடுக்கின்ற கௌரவமாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

 
தூபி புனரமைப்பானது, எவ்வித அரசியல்நோக்கத்திற்காகவும் செய்யப்படவில்லை. இதைப்பயன்படுத்தி எவ்வித அரசியலும் செய்யப்போவதுமில்லை. இறந்தவர்களை கொண்டு அரசியல் நடத்துவதற்கு நான் தயாரில்லை. அவ்வாறு நடத்தினால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையாது. கடந்த முப்பது வருட யுத்தத்திலே பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இறந்தவர்களின் குறிக்கோள்கள் இன்னும் நிறைவேறவில்லை. எமக்கான உரிமை எப்போது கிடைக்குமோ அப்போதுதான், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும். உரிமையை பெறுவதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்படவேண்டிய தருணமே தற்போதைய காலமாகும். ஆனால் அழைப்பு விடுக்காமலையே நிகழ்வை பகிஸ்கரிக்கின்ற நிலை நம்மத்தியிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. புதிய அரசியல் தீர்வொன்றினை கொண்டுவர முயற்சிக்கின்ற போது, தெற்கிலே தடுப்பதற்கு முயற்சிகின்றனர். அதேபோல தமிழ்கட்சிகள் சிலவும் இவ்வாறான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டிய தேவையிருக்கின்றது. எத்தனை உயிர்களை பறிகொடுத்தபின்பும் இன்னும் நாம் ஒற்றுமைப்படவில்லையென்றால், அது நாம் இறந்தவர்களுக்கு செய்யும் துரோகமாகும். என்றார்.