குடிநீர் திட்டத்தில் உன்னிச்சையும், நாசிவன்தீவும் புறக்கணிப்பு – ஜனாதிபதிக்கு கடிதம்

(படுவான் பாலகன்) குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நகர திட்டமிடல் குடிநீர் வழங்கல் அமைச்சு ஊடாக 2017ம் ஆண்டு ஓட்டமாவடிக்கும், வாழைச்சேனைப்பகுதிக்கும் நீர் கொண்டு வருகின்ற பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக 600மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினுள் உன்னிச்சையும்; நாசிவன்தீவும் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறான கிராமங்கள் அவசியம் உள்வாங்கப்படவேண்டுமென தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று(22) தெரிவித்தார்.

 

 
அக்கடிதத்தில்,

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு நகர திட்டமிடல் குடிநீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு ஊடாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் குடிநீர் இல்லாமல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உன்னிச்சை 184யு கிராமசேவகர் பிரிவு உட்பட அப்பிரதேசத்தில் உன்னிச்சை குளத்தை அண்டியுள்ள 4000ற்கு மேற்பட்ட குடும்பங்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நாசிவன்தீவு 250ஊ கிராமசேவகர் பிரிவில், 400குடும்பங்களும் குடிநீர் இன்றி சொல்லொண்ணாத்துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நகர திட்டமிடல் குடிநீர் வழங்கல் அமைச்சு ஊடாக 2017ம் ஆண்டு ஓட்டமாவடிக்கும், வாழைச்சேனைப்பகுதிக்கும் நீர் கொண்டு வருகின்ற பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக 600மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினுள் உன்னிச்சையும்; நாசிவன்தீவும் உள்ளடக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து மாவடத்திலுள்ள ஓட்டமாவடி உட்பட ஏனைய கிராம்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பகுதிலுள்ள சுமார் 10கிராமங்களுக்கு குடிநீர் வழங்காமலும், இதேபோல் பல்லாண்டு காலமாக மனிதபாவனைக்கு உதவாத நீரை அருந்திவரும் நாசிவன்தீவு கிராமத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாமல் குறிப்பிட்ட சில கிராமத்திற்கு மட்டும் 600மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து குடிநீரை வழங்குவதற்கு இவ் அமைச்சுதிட்டம் வகுத்திருப்பது குடிநீர் இன்றி ஏங்கித் தவிக்கும் உன்னிச்சை, நாசிவன்தீவு மக்களை வியப்பில் ஆற்றியுள்ளது.
வாழைச்சேனை, ஓட்டமாவடி கிராமத்துடன் உன்னிச்சை, நாசிவன்தீவு கிராமங்களையும் சேர்;த்து இத்திட்டத்துடன் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கிராம மக்களும் குடிநீரை கேட்கும்போது எதிர்வரும் காலங்களில் நிதியை ஒதுக்கி குடிநீரை வழங்குவோம் என்று சொல்வது மனிதநாகரிகமற்ற செயலாகும். தங்கள் கிராமத்திலிருந்து குடிநீரை வழங்கிவிட்டு குடிநீர் இன்றி அலைந்து திரிவதும், நாசிவன்தீவு கிராமத்தைப் பொறுத்தவரையில் உவர்நீரை அருந்தி நோய்வாய்ப்பட்டு அல்லறுவதும் நீதியான விடயமல்ல.
உன்னிச்சை தொடர்பாக தற்காலிகமாக ஒருசில இடத்திற்கு மட்டும் ஒருசில வளங்களைப் பயன்படுத்தி குடிநீர் வழங்குவதற்கு முனைப்பு காட்டுகின்ற நிலையில் இது தற்காலிகமாக மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகவே கருதுகின்றேன்.
எனவே நிரந்தரமாக குடிநீர் வழங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்கீடு செய்து, ஓட்டமாவடி, வாழைச்சேனையுடன் சேர்த்து உன்னிச்சைப்பகுதிக்கும், நாசிவனதீவிற்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.